

சேலம்: ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சியில், ஆத்தூர்- சேலம் சாலையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகராட்சியின் தகுதிக்கேற்ப சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள் ஒன்றோடொன்று இணைந்தவையாக உள்ளன. இவ்விரு நகராட்சிகளை இணைப்பதாக, ஆத்தூர் - சேலம் நெடுஞ்சாலை உள்ளது. சேலத்துடன் சென்னை, விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள், புதுச்சேரி ஆகியவற்றை இணைப்பதாக, ஆத்தூர்- சேலம் நெடுஞ்சாலை உள்ளது.
எனவே, சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியிலிருந்தும் வரும் பேருந்துகள், ஆத்தூர்- சேலம் நெடுஞ்சாலை வழியாக ஆத்தூர், நரசிங்கபுரத்தைக் கடந்தே சேலம் செல்கின்றன. இந்நிலையில், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரத்தில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்புகளால், பேருந்துகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
விபத்து அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நகராட்சிகளிலும் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: மக்கள் தொகை பெருக்கத்தினால், இரு நகராட்சிகளும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இவ்விரு நகரங்களில் கார்கள், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், நகரில் உள்ள சாலைகள், விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளன.
குறிப்பாக, நகரின் வழியாக செல்லும் ஆத்தூர்- சேலம் நெடுஞ்சாலையில், பேருந்துகள், லாரிகள், கார்கள் என பலவகையான வாகனங்கள் தினமும் பல்லாயிரக்கணக்கில் சென்று வருகின்றன. ஆனால், கொல்லன்பட்டறை தொடங்கி, நரசிங்கபுரத்தை அடுத்த செல்லியம்பாளையம் வரையிலும் உள்ள நெடுஞ்சாலை, மிகவும் நெருக்கடியாக காணப்படுகிறது.
ஆத்தூர் லீ பஜார், அரசு மருத்துவமனை, உடையார்பாளையம், விநாயகபுரம் உள்ளிட்ட இடங்களில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது. கடைகளுக்கு வருபவர்கள் இரு சக்கர வாகனங்களை, சாலையோரத்திலேயே நிறுத்திச் செல்கின்றனர். எனவே, ஆத்தூர், நரசிங்கபுரம் எல்லையைத் தாண்டும் வரை, விபத்து அபாயத்துடன் வாகனங்கள் ஊர்ந்தே செல்ல வேண்டியுள்ளது.
இதேபோல், நெடுஞ்சாலையின் பல இடங்களில் போதிய தெரு விளக்குகளும் இல்லை. எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் சென்டர் மீடியன் மற்றும் தெரு விளக்கு அமைத்து விபத்து அபாயத்தை தடுக்க வேண்டும் என்றனர்.