

கரூர்/ஈரோடு: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சீல் வைத்தனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த கட்டிடத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், அக்கட்டிடம் பூட்டிக் கிடந்தது.
இந்நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதன்பின், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த கட்டிடத்துக்கு அமலாக்கத் துறை துணை இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சீல் வைத்து, நோட்டீஸ் ஒட்டினர்.
அதில், இந்தக் கட்டிடத்தை அமலாக்கத்துறை இயக்குநரகம் அனுமதியின்றி திறக்கக்கூடாது. சென்னையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக துணை இயக்குநர் முன்பு ஆஜராக வேண்டும் அல்லது அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சொந்த ஊரான கரூரில் பேருந்து நிலைய ரவுண்டானா, பாஜக அலுவலகம், சின்னதாராபுரம் அருகே சூ.தொட்டம்பட்டியில் உள்ள அண்ணாமலையின் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு வெடிக்க முயற்சி: குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகேயுள்ள கொடிக் கம்பத்தில் இருந்த பாஜக கொடி நேற்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. தகவலறிந்த பாஜகவினர் அங்கு சென்று, இதில் தொடர்புடையவர்களை கைது செய்யாவிட்டால் மறியலில் ஈடுபடுவோம் எனக் கூறியதை அடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நேற்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அகில இந்திய சட்ட உரிமைகள் கழக மாநில அமைப்புச் செயலாளர் கருவேலம் ஆனந்த் (35) தலைமையில் ஜெயக்குமார், சேகர் உள்ளிட்ட 4 பேர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்க முயன்றனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
டாஸ்மாக் ஒப்பந்ததாரர்: ஈரோடு திண்டல் சக்தி நகரைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (65). டாஸ்மாக் கடைகளுக்கு லாரி மூலம் மதுபானங்களை கொண்டு செல்லும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.
கடந்த மாதம் 26-ம் தேதி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடந்தபோது, சச்சிதானந்தத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சச்சிதானந்தம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் இருந்த சச்சிதானந்தத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் அன்று மாலை ஈரோடு திரும்பினார். பின்னர் அவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.