Published : 04 Oct 2017 10:08 AM
Last Updated : 04 Oct 2017 10:08 AM

ராமேசுவரம் கோயிலில் விலை உயர்ந்த ஏராளமான நகைகள் மாயமானதாக புகார்: அறநிலையத்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரம் கோயிலுக்கு மன்னர்கள், செல்வந்தர்கள் தானமாக வழங்கிய விலை மதிக்க முடியாத ஏராளமான நகைகள் மாயமானது குறித்து அறநிலையத் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த எஸ்.பக்ஷிசிவராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு சொந்தமாக வைரத் தாலி, வைர பல்லாக்கு, வைர மூக்குத்தி, வைர நெக்லஸ், வைர நெத்திச்சுவடி, தங்க தாழம்பு, எமரால்டு திலகம், ப்ளூ ஸ்டோன் திலகம், வைர நெஞ்சு கவசம் உட்பட விலை மதிக்க முடியாத ஏராளமான வைரம், வைடூரிய நகைகளை காணவில்லை.

இந்த நகைகள் கோயிலில் இருப்பதாக 1972-ம் ஆண்டின் கோயில் சொத்துப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 1995-ம் ஆண்டு பட்டியலில் இந்த நகைகள் இடம் பெறவில்லை.

ராமநாத சுவாமி மூல ஸ்தானத்தில் இருந்த 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மணி, விலை மதிக்க முடியாத சங்கு ஆகியவையும் தற்போது காணாமல் போயுள்ளது. இவை திருடப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம்.

கோயில் நகைகள், சொத்துகளை பாதுகாக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை. இந்த நகைகள், பொருட்கள் பல்வேறு மன்னர்களாலும், பெரும் செல்வந்தர்களாலும் கொடையாக அளிக்கப்பட்டவை. இந்த நகைகள் தற்போது எங்கு உள்ளன, கோயில் பதிவேட்டில் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே கோயிலில் இருந்து விலை மதிக்க முடியாத நகைகள் மாயமானது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல்குத்தூஸ் அமர்வில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு அறநிலையத் துறை சார்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x