

மத விழாக்கள் என்ற பெயரில் சாலைகளை மறைத்து கடவுள் சிலைகள் வைக்கப்படுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்துள்ளது.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘மத விழாக்களின் போது சாலைகளை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடவுள் சிலைகள் வைக்கப்படுகின்றன. சென்னை மாநகர முனிசிபல் சட்ட விதிமுறைகளுக்கு மாறாகவும், உரிய அனுமதி பெறாமலும் சென்னையில் பல இடங்களில் இதுபோன்ற சிலைகள் வைக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் பாதையை மறைத்து கடவுள் சிலைகளை வைக்க நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘மத விழாக்கள் என்ற பெயரில் பாதைகளை மறைத்து சிலைகள் வைக்கப்படுவது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கடைசி வாய்ப்பாக 2 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் விதிமுறைகளுக்கு மாறாக பொது பாதைகளை மறைத்து கடவுள் சிலைகள் வைப்பதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.