Published : 15 Jun 2023 04:05 AM
Last Updated : 15 Jun 2023 04:05 AM
விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில், கடந்த இரண்டு நகர்மன்ற கூட்டங்கள் நடைபெறாத நிலையில், நேற்று மாலை நகர் மன்ற கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, நகர்மன்ற கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி கடந்தஇரண்டு நாட்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்கள் 15 பேர் ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நடந்த நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு)ஹசினா உரிய பதில் அளிக்காததால், திமுக கவுன்சிலர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “அனைத்து நகர்மன்ற கூட்டத் திலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
33 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வரி வசூல் செய்யப்பட்ட வார்டுகளில், ஒரு லட்ச ரூபாய்க்கு கூட பொது மக்களுக்காக எந்த பணியும் செய்யாதது ஏன்?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
உடனே திமுக கவுன்சிலர்கள் 13 பேர் மற்றும் பாமக கவுன்சிலர்கள் இருவர் என 15 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே நகர்மன்றத்தில் இருந்த அதிமுக கவுன்சிலர்கள் நான்கு பேரின் ஆதரவுடன் 17 பேர் தீர்மானத்தில் கையொப்பம் இட்டு, நடப்பு பணிகளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.
வெளிநடப்பு செய்த நகர்மன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம், “தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து, சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் திண்டிவனம் நகராட்சியில் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். பல கோடி ரூபாய் வசூல் செய்த பணத்திற்கு பல்வேறு கணக்குகளை காட்டி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவித்தனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT