Published : 16 Oct 2017 06:17 PM
Last Updated : 16 Oct 2017 06:17 PM

பராமரிப்பில்லாத புது வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு; இரு காவலர்களின் குடும்பத்தினருக்கு டெங்கு: உபயோகப்படாத ஹெல்த் கார்டு

புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாததாலும், உரிய பராமரிப்பில்லாததாலும் இரு காவலர்களின் குடும்பத்தினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு காவலர்களுக்கு வழங்கப்பட்ட ஹெல்த் கார்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

டெங்கு பரவாமல் இருக்க மழைநீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும் பழைய வாகனங்களை அகற்ற வேண்டும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் , டயர், நீர்த்தொட்டிகள், தண்ணீர் தேங்கும் பொருட்கள் அகற்றப்படவேண்டும் என சென்னை மாநகராட்சி ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

ஆனாலும் சென்னையில் உள்ள காவலர் குடியிருப்புகளின் நிலை மோசமாக உள்ளது. வாகனங்கள் செல்லும் குடியிருப்பைச் சுற்றிலும் உள்ள பாதைகள் மண் தரைகளாக பராமரிப்பின்றி இருக்கும் நிலையில் மழைபெய்தால் சேறும் சகதியுமாகி விடுவதாக காவலர் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சென்னையில் உள்ள காவலர் குடியிருப்புகளின் மோசமான பராமரிப்பின்மை காரணமாக பல காவலர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டது செய்தியாகி வருகிறது. சமீபத்தில் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் ஆய்வாளரின் 8 வயது மகன் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான்.

தற்போது டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் செல்வம் என்பவரின் மனைவி ஜாக்குலின்(30) மற்றும் ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி கவிதா(26) ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவலர் குடியிருப்பை பராமரிக்க மாதம் 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறதென்றும் சரியான முறையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று காவலர் குடியிருப்பில் வசிப்பவர்கள் புகாராக உள்ளது. தண்ணீர் தொட்டி உள்ளிட்டவைகளை கூட தாங்களே சுத்தம் செய்து கொள்ளும் நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குடியிருப்பில் காய்ச்சல் பரவிய உடன் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சே ஷாங் சாய் உத்தரவின் பேரில் குடியிருப்பை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்றாலும் , அது காலங்கடந்ததாக உள்ளதென்று கூறுகின்றனர்.

தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவலர்கள் தங்களுக்காக அரசு வழங்கிய ஹெல்த் இன்ஷுரன்ஸ் கார்டை சிகிச்சைக்காக கொடுத்தபோது அதை மருத்துவமனைகள் ஏற்கவில்லையாம். தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்தே சிகிச்சை செய்யும் நிலை உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதம் தோறும் காவலர் சம்பளத்தில் சிகிச்சைக்காக ஹெல்த் கார்டு என்று பணம் பிடித்தும், இது போன்ற நேரத்தில் உதவாமல் போனால் என்ன பயன் என்று காவலர்கள் புலம்புகின்றனர்.

பொதுமக்களுக்கு முதலமைச்சர் விரிவடைந்த காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது போல் காவலர்களுக்கும் ஹெல்த் கார்டு மூலம் சிகிச்சை பெற வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x