Published : 15 Jun 2023 04:07 AM
Last Updated : 15 Jun 2023 04:07 AM
வேலூர்: கந்தநேரி அருகே மணல் குவாரியை மூடக்கோரி ஐதர்புரம் கிராம மக்கள் பாலாற்றில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணல் அள்ளிக்கொண்டிருந்த டிராக்டர்களையும் சிறைபிடித்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகேயுள்ள கந்தநேரி பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு டிராக்டர் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஏற்கெனவே மணல் குவாரி அமைக்கப்பட்டு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு்ள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அனுமதி அளித்துள்ள குவாரியில் அதிகப்படியான மணல் அள்ளிய தால் குடியாத்தம் நகராட்சிக்கு செல்லக்கூடிய கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிருப்தியடைந்த ஐதர்புரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கந்தநேரி மணல் குவாரியில் நேற்று காலை குவிந்தனர். அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டர்களை சிறை பிடித்ததுடன் தொடர்ந்து மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பாலாற்றில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவலர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளிடம் பேசி மணல் குவாரி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT