Published : 12 Oct 2017 10:07 AM
Last Updated : 12 Oct 2017 10:07 AM

ரூ.5,200 கோடி நிதி திரட்ட அரசு முடிவு:மதுபானங்கள் விலை உயர்வு

டாஸ்மாக் மதுபான விலை உயர்வுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, குவாட்டருக்கு ரூ.12, பீர் ரூ.10 விலை உயர்கிறது. இதன்மூலம் ரூ.5,200 கோடி அளவுக்கு நிதி திரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. தலைமைச் செயலகத்தில் காலை 11.20 மணிக்கு நடந்த இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் கே.சண்முகம், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடைகள் அடைப்பால் இழப்பு

இக்கூட்டத்தில், தமிழக அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கும் மதுபான விலை உயர்வுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படி 1,000 கடைகள் மூடப்பட்டன. மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளும் மூடப்பட்டன. இதனால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அதிகப்படியான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை வேறு இடங்களில் அரசு திறந்து வருகிறது. இதற்கு அதிக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்

இதற்கிடையே, ஜிஎஸ்டி வரிவிதிப்பால், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. மூடப்பட்ட கடைகளால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பரிந்துரைத்தது. இது தொடர்பாக, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி மதுபானங்களின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்கிறது. குறிப்பாக, குவாட்டர் விலை ரூ.12, பீர் விலை ரூ.10 உயர்த்தப்படுகிறது. தர அடிப்படையில் விலை உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் தமிழக அரசு ரூ.5,200 கோடி அளவுக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x