

சேலத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள் வதற்காக பைக் திருடிய 3 மாண வர்களை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் சீரங்கபாளையத்தைச் சேர்ந்த இம்ரான் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என சேலம் அஸ்தம்பட்டி போலீஸில் புகார் செய்திருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். இம்ரான் தனது மோட்டார் சைக்கிளை யாரும் ஓட்டிச் செல்கிறார்களா என பல்வேறு பகுதிகளில் நின்று கண்காணித்து வந்த நிலையில், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் 2 மாணவர்கள் அவரது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர்களை பின் தொடர்ந்து சென்று மாணவர்களை பிடித்து அஸ்தம்பட்டி போலீஸில் ஒப்படைத்தார்.
மாணவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கூறிய தகவலின்பேரில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார்.
17 வயதே ஆன இந்த 3 மாணவர்களும் பிளஸ் டூ முடித்துவிட்டு, கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் சிக்கியதை அறிந்து, அவர்களது பெற்றோர் சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு ஓடி வந்து உயர் அதிகாரிகளை சந்தித்து, தங்களது குழந்தைகள் தவறு செய்து இருக்க வாய்ப்பே இல்லை என்று வாதாடினர்.
மூவரையும் நாங்கள் கைது செய்யவில்லை. மோட்டார் சைக்கிளை திருடி ஓட்டிச் சென்ற போது, மோட்டார் சைக்கிளின் உரிமையாளரும், பொதுமக்களும் கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்துள் ளோம். கைதான மாணவர்களை ஜாமீனில் எடுத்துக்கொள்ளுங்கள் என போலீஸ் அதிகாரிகள் கூறி பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
3 மாணவர்களையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சிறுவர் சீர்சிருத்தப் பள்ளியில் அடைத்தனர். கைதான 3 மாணவர்களும் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரின் பேரன்.
மற்றொருவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் உறவினர். மூன்றாமவர் தனியார் மருத்துவக் கல்லூரி நடத்தும் கல்வி அதிபரின் பேரன்.
மோட்டார் சைக்கிள்களை பழைய திருடர்கள்தான் திருடி வருகின்றனர் என கருதி வந்த நிலையில், மாணவர்களே பைக் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளது, போலீ ஸாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இவர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்டு வந்துள்ளனர்.
புதிய மோட்டார் சைக்கிள் வாங்கவும், மோட்டார் பந்த யத்தில் கலந்துகொள்ள வேண் டியும், பெற்றோரிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால், கிடைக்காததால், மோட்டார் சைக்கிளை திருடி பந்தயத்தில் கலந்துகொள்ள சிறுவர்கள் திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறார்களை பாதிக்கும் 'நடத்தை கோளாறு' நோய்
சிறுவயதில் திருடும் பழக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதுகுறித்து சேலம் மனநல மருத்துவர் எஸ்.மோகனவெங்கடாஜலபதி கூறியதாவது:
'அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், அரசு அதிகாரிகளும் லஞ்சம், ஊழல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவது குறித்து தினமும் ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளிவருகிறது.
இதனைக் காணும் சிறுவர்கள் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் பெரிய தவறில்லை என்ற மனோநிலைக்கு வர காரணமாகிவிடுகிறது. திருட்டு என்பதை சாதாரண விஷயமாக எண்ணி விடுவதும், விடலை பருவத்துக்கே உரிய துணிச்சலும், இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபட ஹார்மோன்களை தூண்டிவிடுகின்றன. இதனை மருத்துவத்தில் 'நடத்தை கோளாறு' என்பர்.
இதுபோன்ற சிறு திருட்டை வளர விடும்போது, ஆன்டி சோஸியல் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் (ஏஎஸ்பிடி) என்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் பெரும் குற்றவாளியாக மாறிவிடுவர். ஆரம்ப நிலையில் உள்ளவர்களை மனோதத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கியும், மருந்து, மாத்திரைகள் மூலம் சீர் செய்துவிடலாம். நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள் என சீரிய வழிகாட்டுதலை இளைய தலைமுறைக்கு பெற்றோர்கள் அளிப்பது அவசியம்' என அவர் தெரிவித்தார்.