“அப்பட்டமான அதிகார அத்துமீறல்” - செந்தில்பாலாஜி கைதுக்கு முத்தரசன் கண்டனம்

முத்தரசன் | கோப்புப் படம்
முத்தரசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசின் அமலாக்க துறையினர் தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை இன்று (14.06.2023) அதிகாலை 2 மணிக்கு கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக அவர் மீது குறிவைத்து நடத்தப்படும் சோதனை தாக்குதலால் அவர் மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி மன அழுத்தம் அதிகரித்து கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஒருவர் மீது புகார் எழுமானால் அதனை விசாரித்து, குற்றத்தை உறுதி செய்து, தண்டனை வழங்கும் முறை சட்டத்தின் ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாஜக அரசு சட்டத்தின் ஆட்சியை அடியோடு தகர்த்து வருகிறது. பல கட்சி ஆட்சி முறையை அனுமதிக்கும் ஜனநாயக முறையை நிராகரித்து, ஒரு நபரை மையப்படுத்தும் சர்வாதிகாரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஆட்சியை உறுதி செய்துள்ள அரசியல் அமைப்புச் சட்டம் சிறுமைப்படுத்தப்படுகிறது. மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் என்ற கூட்டமைப்புக் கோட்பாடு தகர்க்கப்பட்டு எதிர்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தும் கருவிகளாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உரிமை பறிக்கப்பட்டது. டெல்லி துணை முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் மாநில அமைச்சர்கள் மிரட்டப்படுகின்றனர். தெலுங்கானா முதலமைச்சர் அச்சுறுத்தப்படுகிறார். இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டிலும் பாஜக அரசு ஆளுநர் மாளிகை வழியாகவும், விசாரணை அமைப்புகள் மூலமாகவும் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் நிர்பந்தத்திற்கு பணிந்து மாநில உரிமைகளை பறிகொடுத்து ஒன்றிய அரசின் பல்லக்குத் தூக்கியாக நடந்த அதிமுக அரசை அகற்றி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டின் மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள திமுக அரசுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் விடப்பட்ட சவாலாகும்.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்களின் பேராதரவோடு அமைத்துள்ள திராவிட முன்னேற்ற கழக அரசை மிரட்டும் பாஜக அரசின் அப்பட்டமான அதிகார அத்துமீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in