

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆஞ்சியோகிராம் அறிக்கை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையை பெற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியானது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வமாக தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்றது. இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதைப் பார்க்க ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், செந்தில்பாலாஜியின் ஆஞ்சியோகிராம் அறிக்கை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனை பெற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.