Published : 10 Oct 2017 05:57 AM
Last Updated : 10 Oct 2017 05:57 AM

தாதா ஸ்ரீதர் உடல் இந்தியா வருவதில் சிக்கல் நீடிப்பு

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் உடலை மீட்க வேண்டும் என்று அவரது மகள் தனலட்சுமி கொடுத்த மனுவை மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளது. காவல் துறை சார்பில் அவர் இறந்ததற்கான ஆவணங்களை மட்டுமே பெறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் ஸ்ரீதர் உடலை இந்தியா வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், கடந்த 2016-ம் ஆண்டில் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக இவரை அறிவித்தது.

இந்நிலையில் காவல்துறை யினரின் தேடுதல் வேட்டைக்கு பயந்து வெளிநாடுகளில் பதுங்கியிருந்த ஸ்ரீதர் கடைசியாக கடந்த 4-ம் தேதி கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்கும் முயற்சியில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீதர் போலி பாஸ்போர்ட் மூலம் அங்கு தங்கியிருந்ததால் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவரது உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் மகள் தனலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமதுவிடம் தனது தந்தையின் உடலை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார். அந்த மனுவில் தனது தந்தை கம்போடியாவில் உள்ள கீமா மருத்துவ மனையில் இறந்துவிட்டதாகவும், அவரது உடலை மீட்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமதுவிடம் கேட்டபோது, “கம்போடியாவில் ஸ்ரீதர் இறந்துவிட்டதாக மனு அளித்தனர். அதில் அவர் தேடப்படும் குற்றவாளி என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதனால் அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.

ஆவணங்களை பெற முயற்சி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பயிற்சி ஒன்றுக்காக வெளியூர் சென்றுள்ளதால் காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. இது குறித்து காவல் துறையைச் சேர்ந்த சில முக்கிய அலுவலரிடம் பேசியபோது, “ஸ்ரீதர் உடலை மீட்பது எங்கள் வேலை இல்லை. அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர் இறப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

தற்போது அவர் இறந்தது போன்ற சில படங்கள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வர முடியாது. ஸ்ரீதர் இறந்ததற்கான சரியான ஆவணங்கள்தான் காவல்துறைக்கு தேவை. அதனைப் பெறும் முயற்சியில் இப்போது இறங்க உள்ளோம்.

ஸ்ரீதர் போலி பாஸ்போர்ட் மூலம் கம்போடியாவில் தங்கி இருந்துள்ளார். அவர் சட்டப்படி அந்த நாட்டின் குற்றவாளி. எனவே உடலை மீட்பது சிரமமான விஷயம்” என்றனர்.

இதனால் ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x