மாநில அரசின் பேரிடர் தணிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: அமித் ஷாவிடம் சாத்தூர் ராமச்சந்திரன் கோரிக்கை

மாநில அரசின் பேரிடர் தணிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: அமித் ஷாவிடம் சாத்தூர் ராமச்சந்திரன் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: டெல்லியில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா தலைமையில், பேரிடர் மேலாண்மை தொடர்பாக அனைத்து மாநில பேரிடர்மேலாண்மைத்துறை அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள உள்துறை அமைச்சகத்தோடும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தோடும் தொடர்பு கொண்டு, வழிகாட்டுதல் களை பின்பற்றி வருகிறோம்.

பேரிடர் தணிப்பு பணிகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர்தான் மாநிலத்தின் பேரிடர் தணிப்புப் பணிகளுக்கு தேவையான தொகை தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து கிடைக்கிறது. இந்த நிலையை மாற்றி மாநில அரசு, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையிலேயே மத்திய ஒதுக்கீடு வழங்குவது பரிசீலிக்கப்பட்டு திட்ட ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.

ஒரு நிதி ஆண்டில் குறிப்பிட்ட ஒரு பேரிடருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், மாநில அரசின் எழுத்துப்பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் இந்த நிபந்தனையை உள்துறை அமைச்சகம் தளர்த்தலாம்.

தமிழகம் பல்வேறு பேரிடர்களின் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாவதால் மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ஒரு நிதியாண்டில் ஒரு பேரிடருக்கு 50 சதவீதத்துக்கு மேல் செலவிட மத்தியஅரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் நான்கு பிரிவுகளின் ஒரு பிரிவான சீரமைப்புக்காக குறைந்தஅளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியின் இதர பிரிவுகளான மீட்பு மற்றும் நிவாரணம், ஆயத்த நிலை (ம) திறன் மேம்பாடு ஆகியவற்றில் இருந்து பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in