

சென்னை: மத்திய அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மற்றும் பாடத்திட்டத்தை சென்னையில் நேற்று தொடங்கி வைத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி கையேட்டை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் போட்டி தேர்வு பிரிவானது கடந்தமார்ச் 7-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் ரயில்வே, எஸ்எஸ்சி, வங்கித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் 100 நாட்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.
மாவட்டந்தோறும் 150 மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல் மற்றும் பாடப் புத்தகங்கள் கொடுக்க திட்டமிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பயிற்சி வகுப்புகளுக்காக, ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் மொத்தம் 26 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதில் 6,900 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கான பயிற்சி வகுப்புகள் மற்ற மாவட்டங்களில் கடந்த மாதம்29-ம் தேதி முதல் நடைபெறும் நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பயிற்சி வகுப்பு இன்று(ஜூன் 13) தொடங்கப்பட்டது.
ஒரு காலத்தில் யுபிஎஸ்சி முடிவு வந்தால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை நம்முடைய தமிழக தேர்வர்கள் வென்றார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை. மத்திய அரசு அலுவலகங்களிலும் நம்முடைய மாநில அதிகாரிகளின் எண்ணிக்கைகுறைந்து வருகிறது.
மொழி ஒரு தடையாக இருப்பதால் அரசு சேவை மற்றும் இதர சேவைகள் சென்றடைவதில் ஒரு தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசு தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களும், அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெறவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.