Published : 14 Jun 2023 06:06 AM
Last Updated : 14 Jun 2023 06:06 AM

ஏர்வாடியில் விமரிசையாக நடந்த சந்தனக்கூடு திருவிழா: பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்ஹாவை வலம் வந்த சந்தனக்கூடு. படம்: எல்.பாலச்சந்தர்

ராமநாதபுரம்: ஏர்வாடியில் பிரசித்திபெற்ற பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு சுல்தான்செய்யது இபுராஹிம் ஷாஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு மதநல்லிணக்க விழாவாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 849-வது சந்தனக்கூடு திருவிழா, மே 21-ம் தேதி தொடங்கியது. மே 31 மாலை கொடியேற்றம் நடைபெற்றது.

முக்கியத் திருவிழாவான உரூஸ்என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு யானை, குதிரைகள் முன்செல்ல, தாரை தப்பட்டைகள் ஒலிக்க, வாண வேடிக்கையுடன் ஊர்வலமாகச் சென்று தைக்காவிலிருந்து போர்வை எடுக்கும் நிகழ்வுநடந்தது.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில், ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவிலிருந்து சந்தனக்கூடு எடுத்து, மின்னொளி அலங்கார ரதத்தில் வைத்து யானை, குதிரைகள் முன்செல்ல, பாரம்பரிய சம்பிரதாயப்படி தீப்பந்தம் பிடித்தவாறும், இஸ்லாமிய மார்க்க பாடல் பாடியவாறும் ஊர்வலமாகப் புறப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் தர்ஹாவை சந்தனக்கூடு வந்தடைந்தது. பின்னர், தர்ஹாவை 3 முறை சந்தனக்கூடு வலம் வந்த பின், பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது.

இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில், சிறுபான்மையினர் நலம் மற்றும் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று சிறப்புத் தொழுகை செய்தார். ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்தத் திருவிழாவையொட்டி, ராமநாதபுரம், மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல நகரங்களிலிருந்தும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏர்வாடி தர்ஹாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தர்ஹா வளாகத்தில் சிறப்பு மருத்துவக் குழுவினர் முகாமிட்டிருந்தனர்.

இத்திருவிழா, ஜூன் 19-ம் தேதிகொடியிறக்கத்துடன் பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முஹம்மது பாக்கீர் சுல்தான் லெவ்வை, செயலாளர் சிராஜூதீன் லெவ்வை, பொருளாளர் சாதிக் பாட்ஷா லெவ்வை உள்ளிட்ட நிர்வாக சபையினர் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x