Published : 14 Jun 2023 06:14 AM
Last Updated : 14 Jun 2023 06:14 AM
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடந்தது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு தனி தரிசனப் பாதை அமைக்க வேண்டும், ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றி பக்தர்களின் வசதிக்காக நிழற்கூடை அமைக்க வேண்டும், கோயிலின் உள் பிரகாரங்களில் கம்பி வேலி அமைக்கக் கூடாது, கோயிலுக்குள் உள்ள தீர்த்த கிணறுகளுக்குச் செல்லும் பாதையை சுத்தமாக வைக்க வேண்டும், ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்படும் கோயில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பாதுகாப்புப் பேரவை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.
போராட்டத்தைப் பேரவை சார்பாக மீனவப் பிரதிநிதி போஸ், மீனவ தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் செந்தில்வேல், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன், செயலாளர் குருசர்மா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
அதிமுக நகரச் செயலாளர் அர்ஜுனன், அவைத் தலைவர் பிச்சை, பாஜக நகர் தலைவர் தர், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜீவ் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ஜீவானந்தம், தேமுதிக நகரத் தலைவர் முத்து காமாட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி நகரச் செயலாளர் ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் கண். இளங்கோ, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞர் அணி தலைவர் ஜெரோன் குமார், விவேகானந்தா குடில் சுவாமி பிரம்மானந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பல்வேறு சிவனடியார் குழுக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT