Published : 14 Jun 2023 06:30 AM
Last Updated : 14 Jun 2023 06:30 AM

மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து 2 பேர் கொலை

மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில் தத்தங்குடி பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சயனைடு கலந்த மது குடித்த 2 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், சொத்து தகராறில் சகோதரர்களே மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்ததால், அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த தத்தங்குடி பிரதான சாலையைச் சேர்ந்தவர் பழனி குருநாதன்(55). இவர் மங்கைநல்லூர் பிரதான சாலையில் இரும்பு பட்டறை வைத்து நடத்தி வந்தார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி(65) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பட்டறையில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்த 2 மது பாட்டில்களில், ஒரு பாட்டிலில் பாதிஅளவு மதுவும், மற்றொரு பாட்டில் திறக்கப்படாமலும் இருந்தன. இதையடுத்து, அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பெரம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், இருவரது உடல்களும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையே, பட்டறையில் இருந்து கைப்பற்றப்பட்ட 2 மதுபாட்டில்களையும் தஞ்சாவூரிலிருந்து வந்த தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில், ஒரு பாட்டில் காலியாகவும், மற்றொரு பாட்டில் திறக்க முடியாத வகையில் ஃபெவி குவிக் போட்டு ஒட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அந்தபாட்டிலில் உள்ள மதுவை ஆய்வு செய்தபோது, அதில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த மதுவை அவர்கள் எந்த டாஸ்மாக் கடையில் வாங்கினார்கள்? அதில் சயனைடு கலந்தது எப்படி? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

பழனிகுருநாதன், பூராசாமி

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தவறான தகவலை தெரிவிப்பதாகவும், டாஸ்மாக் மது குடித்ததால்தான் உயிரிழந்தனர் என்றும், அரசு உரிய நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில் தத்தங்குடி பகுதியில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, டிஎஸ்பி சஞ்சீவ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் சார்பில் தலா ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஆட்சியர் அறிக்கை: இதனிடையே பழனி குருநாதன் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில், சொத்து தகராறு காரணமாக பழனி குருநாதனின் சகோதரர்கள், மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் திருச்சி மண்டல தடயவியல் துறை துணை இயக்குநரின் முதல் கட்ட பரிசோதனை அறிக்கையின்படி, உயிரிழந்த இருவரது ரத்தம் மற்றும் உள்ளுறுப்புகளில் சயனைடு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சொத்து தகராறு: இந்நிகழ்வுக்கு பின்னணியில் பழனி குருநாதனின் தந்தையின் 2-வது மனைவியின் மகன்களான வே.மனோகரன், வே.பாஸ்கரன் ஆகியோர் சொத்து தகராறு காரணமாக, மதுவில் சயனைடு கலந்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x