Published : 23 Oct 2017 09:29 AM
Last Updated : 23 Oct 2017 09:29 AM

விவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்க்க முயற்சி; நிதி ஆயோக் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ராமதாஸ், வைகோ வலியுறுத்தல்

விவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிதி ஆயோக் பரிந்துரையை நிராகரிக்குமாறு மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்திய பட்டியலுக்கோ, பொதுப் பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறியிருக்கிறார். மாநில உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்ட இப்பரிந்துரை கண்டிக்கத்தக்கது. மத்திய பட்டியலுக்கு மாற்றப்படுவதால் விவசாயத்துக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் என்றால் அதை பட்டியல் மாற்றம் செய்வதில் தவறு இல்லை. மாறாக மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டால் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும்.

விவசாயம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும்கூட, விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசுதான் நிர்ணயிக்கிறது. விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் கொள்கை. விவசாயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான ஒப்பந்தங்களை உலக வர்த்தக அமைப்புடன் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. அவற்றையும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடவும் மாநில அரசுகள் தடையாக இருப்பதால்தான் விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு துடிக்கிறது. அதற்கான கருவியாக நிதி ஆயோக்கை பயன்படுத்திக் கொள்கிறது. இதன் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அத்துடன் நிதி ஆயோக் அமைப்பையும் மத்திய அரசு கலைக்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மாநிலங்கள் விவசாயத் துறையில் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளைத் தீர்க்க முடியாத மத்திய அரசு, விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மாநில அரசின் பொறுப்பு. அதற்கு மத்திய அரசு உதவ முடியாது என்று திட்டவட்டமாக கைவிரித்துவிட்டது. இந்நிலையில், விவசாயத் துறையை மாநில அதிகாரப் பட்டியலில் இருந்து பறித்துச் செல்ல முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது.பொதுப் பட்டியலின் கீழ் கல்வித்துறை மாற்றப்பட்டுவிட்டதால் மாநிலங்களின் கல்வி உரிமைகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதற்கு ‘நீட்’ தேர்வு ஒரு சான்றாகும். இந்நிலையில், வேளாண்மைத் துறை, உணவு பதப்படுத்துதல் துறை போன்றவற்றையும் மத்திய அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது. இந்த முயற்சிக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x