Published : 14 Jun 2023 06:16 AM
Last Updated : 14 Jun 2023 06:16 AM

9 ஆண்டில் தமிழகத்தின் ஜவுளித்துறை பங்கு அதிகம்; 2047-ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

சென்னை: மத்திய ஜவுளித் துறையில் தமிழகத்தின் பங்கு கடந்த 9 ஆண்டுகளில் மிகவும் அதிகம் என்றும், வரும் 2047-ல் இந்தியா வல்லரசு நாடாகிவிடும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் சென்னை வேளச்சேரி, காந்தி சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகள் சாதனை, நூற்றாண்டு சாதனைகளுக்கு இணையானது. 2004-2014வரையிலான திமுக - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியானது ஊழல் ஆட்சியாக மட்டுமே இருந்தது. அதன்பின் 2014-ல் பிரதமராகமோடி நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்ததைத் தொடர்ந்து,நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது. சாதாரண மக்களின் வாழ்நாள்கனவான சொந்த வீடு கட்டும் திட்டத்தில் 11 கோடிக்கு மேல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தெருவோர வியாபாரிகளுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் வரை வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. முத்ரா வங்கித் திட்டத்தில் இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் பெண்கள் அதிகளவு, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்காக கடன் வாங்கி, தொழில் தொடங்கியுள்ளனர்.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 22 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய ஜவுளித் துறையில், தமிழகத்தின் பங்கு அதிகளவில் இருந்து வருகிறது. நாம் 100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும்2047-ம் ஆண்டில், இந்தியா உலகளவில் பெரும் வளர்ச்சி பெற்று, வல்லரசு நாடாக இருக்கும். அதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பாஜகவின் 9ஆண்டுக்கால சாதனை புத்தகத்தை,மத்திய இணை அமைச்சர்எல்.முருகன் வெளியிட்டார்.தொடர்ந்து அவருக்கு, பாஜகவின்வேளச்சேரி கிழக்கு மாவட்டம் சார்பில் செங்கோல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் வினோத் டி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா, தேசிய மொழிப் பிரிவின் மாநிலத் தலைவர் கே.பி.ஜெயகுமார், பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சாய் சத்யன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதேபோல், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் பாஜகவின் தமிழக இலக்கிய பிரிவின் மாநில தலைவர் எம்.ஆதித்யா தலைமையில் சாதனை விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பேச்சாளர்கள் டி.கே.ஹரி,ஹேமா ஹரி, முனைவர் காயத்ரிசுரேஷ், திரைப்பட இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x