

சென்னை: சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் செயல்படும் கேஎஃப்எச் ஹோமியோபதி குழந்தைப் பேறு மையத்தில் புதன்கிழமை தோறும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இலவச ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்படுகின்றன.
டாக்டர் கோப்பிகர் ஹோமியோபதி அறக்கட்டளை, ஸ்ரீ சந்திரசேகரா அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்த மையத்தில் குழந்தையின்மைக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் இலவச ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த மையம் வாரந்தோறும்புதன்கிழமை காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை செயல்படுகிறது.
இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, உலக அளவில் குழந்தையின்மை என்பது 15 சதவீத தம்பதிகளைப் பாதிக்கிறது.
தம்பதிகள் தயக்கம்: குழந்தையின்மை பிரச்சினைக்குக் காரணம் பெண்கள் மட்டும் அல்ல. 40 சதவீத ஆண்களுக்கும் இதில் பங்குஉள்ளது. இப்பிரச்சினையில் பெண்களுக்கான காரணங்கள் 30 சதவீதம் முதல் 35 சதவீதம். ஆண் -பெண் ஒருங்கிணைந்த காரணங்கள் 25 சதவீதம். இதில் விவரிக்கப்படாத காரணங்கள் 10 சதவீதம் ஆகும்.
குழந்தையின்மை பரவலாகக் காணப்பட்டாலும் மருத்துவத் தொழில்முறை உதவியை நாடுவதற்கு, தம்பதிகள் மத்தியில் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதனால், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது.
பாதுகாப்பான தீர்வு: ஐவிஎஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் அதிக செலவு கொண்டதாகவும், பல தம்பதிகளுக்கு அணுக முடியாததாகவும் அமைந்துவிடுகிறது. சிகிச்சையில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தோல்வியால் பண ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தம் ஏற்பட்டு பிரச்சினை மேலும் தீவிரமாகிறது.
மன அழுத்தம், கருவுறுதலில் உண்டாக்கும் பிரச்சினையில் இருக்கும் அவர்களுக்கு ஹோமியோபதி குழந்தைப் பேறு மையம் ஆதரவாகஇருந்து உடல், மனதின் செயல்பாடுகளின் சம நிலையை மீட்டெடுப்பதன் மூலம் கருத்தரிப்பதற்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க உதவுகிறது.
குழந்தையின்மை பிரச்சினையில் இருக்கும் தம்பதிகளுக்கு ஹோமியோபதி எளிய, பாதுகாப்பான தீர்வுகளை வழங்குகிறது. இயற்கையாகக் கருத்தரிக்கவும், ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கவும் ஹோமியோபதி உதவுகிறது. குறிப்பாக ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லை.
குழந்தையின்மைக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் இலவச ஆலோசனைகள், மருந்துகள் பெறுவதற்கும், மேலும் விவரங்களுக்கும் 9566256206 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று டாக்டர் கோப்பிகர் ஹோமியோபதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.