

தாம்பரம்: அதிகமாக பயணிகள் கூடும் தாம்பரம் ரயில் நிலையத்தில் வட, தென் மாவட்டங்கள் செல்லும் நடைமேடையில் மின்சார ஏணி (எஸ்கலேட்டர்) வசதி ஏற்படுத்த வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் பகுதியை தொடர்புகொண்டு பள்ளிகரணையை சேர்ந்த திருமலைக்குமார் கூறியதாவது:
வெளியூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரும் பயணிகள் பலரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் புழங்குகின்றனர். நிலையத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்ல நடைமேம்பாலம் மற்றும் எஸ்கலேட்டர் வசதி உள்ளது.
அதேபோல் ரயில் நிலையத்தில் மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன. உள்ளூர் ரயில்கள் செல்ல 4 நடைமேடைகள் உள்ளன. அதில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் எஸ்கலேட்டர் வசதியுடன் படிக்கட்டு வசதியும் உள்ளது.
ஆனால் வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் 5,6,7,8 நடைமேடைகளில் படிகட்டு வசதி மட்டுமே உள்ளது. இங்கு எஸ்கலேட்டர் வசதி இல்லை. வெளியூரிலிருந்து வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடைமைகளை சுமந்தபடி வரும் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, அவர்களின் நலன் கருதி மற்ற நடைமேடைகள் உள்ளது போல் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் எஸ்கலேட்டர் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தாம்பரம் ரயில் நிலைய மேலாளர் எஸ். அன்பழகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன அதில் நான்கு நடைமேடைகளில் தற்போது எஸ்கலேட்டர் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக 4 நடைமேடைகள் 2 ஆண்டுகளில் அமைக்கப்படும்.
மொத்தம் 12 நடைமேடையில் லிப்ட் வசதியுன் எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்பட உள்ளது. மாநில அரசும் ரயில்வே நிர்வாகமும் இணைந்து இந்த பணியை மேற்கொள்கின்றன. ஓரிரு மாதங்களில் இந்த பணி நிறைவடையும். அப்போது அனைத்து நடைமேடைகளிலும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு கூறினார். வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் வந்து செல்லும் 5,6,7,8 நடைமேடைகளில் படிகட்டு வசதி மட்டுமே உள்ளது.