

மதுரை: மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத் தலைவராக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மதுரையில் மதுரை உட்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த வங்கிக் கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கடன் வசூல் தீர்ப்பாயம் (டிஆர்டி) உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த தீர்ப்பாயத்துக்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை தலைவராக மத்திய அரசு நியமிக்கும்.
மதுரை டிஆர்டி தலைவர் பணியிடம் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்தது. கோவை டிஆர்டி தலைவர் மதுரை டிஆர்டியின் பொறுப்பு தலைவராக இருந்தார். இருப்பினும் மதுரையில் விசாரணை நடத்தாமல் இங்குள்ள வழக்குகள் கோவையில் விசாரிக்கப்பட்டு வந்தன. இதனால் மதுரை டிஆர்டியில் வழக்குகள் தேங்கி, உடனடி நிவாரணம் பெற முடியாமல் கடன்தாரர்கள் தவித்து வந்தனர்.
மதுரை டிஆர்டிக்கு தலைவரை நியமிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் டிஆர்டி வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மதுரை டிஆர்டி தலைவரை நியமிக்க மத்திய அரசுக்குக் கெடு விதித்தது. இந்நிலையில் மதுரை டிஆர்டி தலைவராக ஜார்க்கண்ட் மாநில ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சீமா சின்ஹாவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் மதுரை டிஆர்டியுடன் டில்லி டிஆர்டி-2 மற்றும் 3, கோல்கத்தா டிஆர்டி- 2 மற்றும் 3-க்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை பணியில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து டிஆர்டி வழக்கறிஞர்கள் கூறியதாவது: மதுரை டிஆர்டிக்கு இரண்டரை ஆண்டுக்கு முன்பும் வட மாநில ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் பணியில் சேரவில்லை. தற்போது மீண்டும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 66 வயதாகிறது. டிஆர்டியில் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை. மதுரையிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நேரடி விமான சேவை கிடையாது. இது போன்ற காரணங்களால் அவர் பணியில் சேர்வாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட நீதிபதியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவரைத் தலை வராக நியமித்தால் டிஆர்டியில் தொய்வில்லாமல் விசாரணை நடைபெறும், என்று கூறினர்.