Published : 14 Jun 2023 04:17 AM
Last Updated : 14 Jun 2023 04:17 AM
ஈரோடு: அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கீழ்பவானி விவசாயிகள் 7-வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை நேற்று நிறைவு செய்தனர்.
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் விவசாயிகள், கடந்த 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகள் போராட்டத்துக்கு பாஜக, கொமதேக, நாம் தமிழர், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் கடையடைப்பு நடந்தது.
விவசாயிகளின் உண்ணாவிரதம் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி நேற்று மாலை சந்தித்து பேசினார். அவர் அளித்த உறுதிமொழியை அடுத்து, விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ஈரோடு எம்பி கணேசமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, அரசிடம் பேசி, அதற்கு என்ன செய்ய முடியும் என்பது பற்றி, மீண்டும் விவசாயிகளிடம் பேச இருக்கிறோம். எனவே, அதுவரை எங்கேயும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்து, அனைவரின் சம்மதமும் கிடைக்கும் வகையில் யாரும் பாதிக்காத வகையில் ஒரு முடிவை எடுக்க வேண்டும், என்றார்.
கீழ்பவானி விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது: எங்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உதவுவதாக அமைச்சர் உத்தரவாதம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும். எங்களைப் பொறுத்தவரை கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்களைச் செய்யச் சொல்லியுள்ளோம். புதிய கட்டுமானங்களை அந்த பகுதி விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு செயல் படுத்த வேண்டும். புதிதாக தேவையற்ற இடங்களில் கட்டுமானங்களைச் செயல்படுத்தக்கூடாது.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது பொதுமக்கள், விவசாயிகள் கருத்தைக் கேட்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 95 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பதால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, எங்களது நியாயமான கோரிக்கைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம், என்றார். 95 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பதால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, எங்களது நியாயமான கோரிக்கைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT