

டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் தினமும் 10 பேர் பலியாகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியானதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. டெங்கு உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் நிலையில் சென்னை கொளத்தூரில் இன்று (அக்.5) செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் கூறியிருக்கிறார். உண்மையை உரைத்ததற்கு நன்றி. ஆனால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 26 பேர் மட்டுமே பலியானதாக அரசு பொய்யான தகவலைத் தெரிவித்திருக்கிறது. டெங்குவுக்கு தினமும் 10 பேர் பலியாகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்.
டெங்கு காய்ச்சலை வருமுன் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது வெட்கக்கேடானது. இப்போது, காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதியை மட்டும் சுத்தம் செய்கின்றனர்.
மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை திமுக மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். திமுகவினர் இந்தப் பணி தொடரும்" என்றார்.