Published : 23 Oct 2017 10:29 AM
Last Updated : 23 Oct 2017 10:29 AM

பாண்டூரில் காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு: சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாம்

பாண்டூரில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியானதை தொடர்ந்து, செங்கல்பட்டு சுகாதாரத்துறை சார்பில் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக் கழுக்குன்றம் அடுத்த பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் கோமதி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று முன்தினம் இறந்தார்.

இதனால், பாண்டூர் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் மாணவி இறந்ததாக தகவல் பரவியது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் நிமோனியா காய்ச்சல் காரணமாக மாணவி இறந்ததாக தெரிவித்துள்ளது.

எனினும், கிராமப் பகுதியில் டெங்கு காய்ச்சல் அச்சம் பரவியதால், மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் டெங்கு காய்ச்சல், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் செங்கல்பட்டு சுகாதாரத்துறை சார்பில் நேற்று மேற்கொள்ளப்பட்டன. அப்போது, வீடு வீடாகச் சென்று கொசு மருந்து தெளித்தல், சாலையில் தேங்கிய குப்பை, கழிவுநீரை அகற்றுதல் போன்ற பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும், கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் காய்ச்சல் தடுப்பு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு நிலவேம்பு குடிநீர் மற்றும் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை மருத்துவர்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் கவிதா உட்பட சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x