Published : 16 Oct 2017 08:48 AM
Last Updated : 16 Oct 2017 08:48 AM

கனமழையால் பறவைகள் வருகை அதிகரிப்பு: வேடந்தாங்கல் சரணாலயம் இன்று திறப்பு

வேடந்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து பறவைகளுக்கு ஏற்ற சீதோஷ்ணம் நிலவுகிறது. இதனால், சரணாலயத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இதைடுத்து, பார் வையாளர்களுக்காக இன்று சரணாலயம் திறக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் கிராமத்தில் 73 ஏக்கர் பரப்பளவிலான ஏரியில் அடர்ந்த மரங்களுடன் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையில் பறவைகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவும். அதனால், அமெரிக்கா, சுவீடன், நேபாளம் மற்றும் நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக சரணாலயத்துக்கு வருவது வழக்கம்.

கடந்த 3 ஆண்டுகளாக வேடந்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்தாலும், சரணாலய ஏரிக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் குறைவான பறவைகளே வந்து சென்றன. இதனால், வழக்கமாக ஜூன் மாதத்தில் மூடப்படும் சரணாலயம் கடந்த ஆண்டு மே மாதத்தில் மூடப்பட்டது.

இந்நிலையில், சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பறவைகளுக்கு ஏற்ற இதமான சீதோஷ்ண நிலை தற்போது நிலவுகிறது. இதை அடுத்து, சரணாலயத்துக்கு மீண்டும் வெளிநாடு மற்றும் உள்ளூர் பறவைகள் வரத்தொடங்கியுள்ளன. ஏரியில் ஆங்காங்கே பறவைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு, மரக்கிளைகளில் கூடு கட்டத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வனச்சரகர் சுப்பையா கூறியதாவது: கடந்த சீசனில் சரணாலயத்துக்கு 22 ஆயிரம் பறவைகள் வந்தன. முட்டையிட்டு குஞ்சு பொறித்து 60 ஆயிரம் பறவைகளாக திரும்பிச் சென்றன. பறவைகளை கண்டு ரசிப்பதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து சென்றனர்.

தற்போது, சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மீண்டும் சீசன் தொடங்கியுள்ளதால் தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலய ஏரியில் தங்கியுள்ளன. இதனால், பார்வையாளர்களுக்காக சரணாலயம் இன்று திறக்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x