Published : 13 Jun 2023 07:12 PM
Last Updated : 13 Jun 2023 07:12 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா பகுதிகளில் வறட்சியாலும் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் சென்றுவிட்டதாலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் கருகிவிட்டன.
இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். திசையன்விளை தாலுகா பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர். அதிலும், மழையையும், நிலத்தடி நீரையும் நம்பி ஏராளமான விவசாயிகள் வாழைகளை விளைவித்துள்ளனர்.
ஆனால் வறட்சி காரணமாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாலும் நடப்பு பருவத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தற்போது கருகிக் கொண்டிருக்கின்றன. வாழைகளை காப்பாற்ற தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்றியும் அவற்றை காப்பாற்ற முடியாத சோகத்தில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். திசையன்விளை வட்டாரத்தில் தற்போது 500 முதல் 600அடி ஆழத்திலும்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் தற்போதும் கருகும் வாழைகளை காப்பாற்ற வருண பகவான் கருணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
இப்பகுதியில் விவசாயிகள் சிலர் நகைகள், மனைகள், வாகனங்கள் போன்றவைகளை விற்பனை செய்து வாழைகளை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் அவை கண்முன்னே கருகுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்பகுதியில் நிலவும் வறட்சி பாதிப்பை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதுடன், சாகுபடிக்காக பெறப்பட்ட கடன் தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்
முதுமொத்தன்மொழி விவசாயி அரிச்சந்திரன் கூறும்போது, கடந்த ஆண்டு வாழை நல்ல விளைச்சல் தந்தது. இந்த ஆண்டும் மழை பெய்து தண்ணீர் கிடைக்கும் என்று நம்பி வாழை நட்டேன். ஆனால் கடும் வறட்சியால் தண்ணீர் கிடைக்கவில்லை. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த மாதம் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளனர். ஆனாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. நகைகளை வங்கியில் அடமானத்தில் வைத்து விவசாயம் செய்திருக்கிறோம். அரசு கருணை காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
முதுமொத்தன்மொழி ஊராட்சிக்கு உட்பட்ட தங்கம்மாள்புரத்தில அதிசய கிணறு உள்ளது. இக்கிணற்றில் அதிகபட்ச கொள்ளளவில் நீர்வரத்து இருந்ததால், இப்பகுதியில் பாசன வசதிக்கு உகந்ததாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு கிணற்றில் நிரம்பிய நீர் வரத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செழிப்பாக நடைபெற்றிருந்தது. ஆனால் இவ்வாண்டு கடும் வறட்சியால் இந்த கிணறும் வற்றிவிட்டதால் சாகுபடி செய்த விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தங்கம்மாள்புரைத்த சேர்ந்த விவசாயி சகாதேவன் கூறும்போது, நான் இந்த ஆண்டு 1200 செவ்வாழை நட்டுள்ளேன். வறட்சி தாண்டவமாடும் நிலையில் அனைத்து வாழைகளும் குலைவந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் பட்டுப்போய் விட்டன. வாழைகளை காப்பாற்ற 4 ஆழ்துளை கிணறுகளை அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
இப்பகுதியை சேர்ந்த விவசாயி தீபன் கூறும்போது, மணிமுத்தாறு அணையிலிருந்து இந்த அதிசய கிணற்றுக்கு தண்ணீர் விட்டால், இப்பகுதியில் விவசாயம் செழிக்கும் என்று கூறினார். திசையன்விளை வட்டாரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளை வாழ வைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT