

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: முதல்வர் கேட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொல்லியிருக்கிறார். பாஜக 9 ஆண்டுகளாக என்ன செய்துள்ளது. 10 ஆண்டில் என்ன செய்யப்போகிறோம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.
மக்களுக்கு தெரியும்: ஆனால், இந்த 2 ஆண்டுகளில் திமுக ஆட்சி ஊழலுக்கு பெயர் வாங்கியுள்ளது. அதனால்தான் பால்வளத்துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். 30 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்ததாக சொன்னதால்தானே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டார். ஊழலுக்கு பெயர்போனது திமுக. பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை மக்களுக்கு தெரியும்.
2004 முதல் 2009 வரை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அமைச்சர்கள் யார் என்றால், திமுக அமைச்சர்கள்தான். 2004 முதல் 2014 வரை ஒரு மோசமான ஊழல் வரலாறு, திமுக அமைச்சர்களால் எழுதப்பட்டுள்ளது.
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தில் அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீட் தேர்வுக்கு முன்பு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வில் முறைகேடுதான் நடந்தது.
மருத்துவக் கல்லூரிகள்: ஏழை குழந்தைகளும், விவசாயியின் குழந்தைகளும் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வு கொண்டு வந்தது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தொகுதிபங்கீடு குறித்து பேசி முடிவு எடுக்கப்படும்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக் கப்பட்டன. மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
திமுக அடுத்த தலைவர் கனிமொழி: திமுகவின் அடுத்த தலைவராககனிமொழி வருவதற்கு தயாராகிவிட்டார். கனிமொழியை நோக்கி கட்சி சென்று கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனாக இருப்பதால் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரப்போகிறார். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.