

ராமேசுவரம்: சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான, சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்தது. தொடர்ந்து நவம்பர் மாதம் சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தொடர்ந்து வேலூர் சிறையிலிருந்து விடுதலையான சாந்தன், முருகன் மற்றும் புழல் சிறையிலிருந்து விடுதலையான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை வல்வெட்டித்துறையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி (77) தனது மகனை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாந்தனின் தாயார் மகேஸ்வரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது மகன் சாந்தன், இந்தியப் பிரதமர் மோடிக்கு தனது சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளார். என் பிள்ளையை திரும்ப அனுப்பித் தாருங்கள்.
கடந்த 32 ஆண்டுகளாக நான் என் பிள்ளையைப் பார்க்காமல் உள்ளேன். எனது கடைசிக் காலத்தை பிள்ளையுடன் கழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது உயிரைப் பிடித்து வைத்திருக்கின்றேன். எனது வலது கண் பார்வை முழுவதும் போய் விட்டது. இடது கண் பார்வையும் போவதற்குள் என் பிள்ளையை நான் பார்த்து விட வேண்டும். என் பிள்ளையை நான் பார்க்காவிட்டால் இனிமேலும் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை. இவ்வாறு அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.