

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், அங்குள்ள கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
சென்னை சவுகார்பேட்டை, மிண்ட் தெருவில் தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு , துணிக்கடை உட்பட சுமார் 13 கடைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் உள்ள துணிக்கடை, பாத்திரக் கடைகளில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது.
பின்னர் மளமளவென தீப்பிடித்தது. இது குறித்து தகவல் பெற்று வண்ணாரப்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து 9 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். இதேபோல் அதிநவீன ‘ஸ்கை லிப்ட்’ தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டது. சுமார் 50வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடைபெற்ற இடத்தில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.