ரேஷன் சர்க்கரை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக: அன்புமணி

ரேஷன் சர்க்கரை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக: அன்புமணி
Updated on
2 min read

சர்க்கரை மானியத்தை மத்திய அரசு  ரத்து செய்தாலும் அதை தாங்களே ஏற்றுக் கொள்ளப் போவதாகவும், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் தமிழக அரசு உறுதி அளித்தது. ஆனால், அடுத்த 5 மாதங்களில் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு சர்க்கரை விலையை  தமிழக அரசு உயர்த்தியிருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். ரேஷன் சர்க்கரை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோ 13.50 ரூபாயிலிருந்து ரூ.25 ஆக உயர்த்தப்படுவதாகவும், இவ்விலை உயர்வு வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை பாதிக்கும் வகையிலான நியாயவிலைக்கடை சர்க்கரை விலை உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நியாயவிலைக்கடை சர்க்கரை விலை உயர்வுக்காக தமிழக அரசு தெரிவித்துள்ள காரணங்கள் எதுவும் ஏற்கத்தக்கவை அல்ல. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நியாயவிலைக் கடைகளில் வழங்கப் படும் சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டதாகவும், அதனால் வேறு வழியின்றி தமிழகத்திலும் சர்க்கரை விலை உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்குமான பொதுவினியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதை ஏற்கக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுடன் ரகசியமாக பேச்சு நடத்தி உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினார். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ளும் என்று தமிழக அரசின் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த உத்தரவாதத்தை மறந்து விட்டு சர்க்கரை விலையை தமிழக அரசு உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது; நியாயப்படுத்த முடியாது.

சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு கடந்த 01.06.2017 முதல் ரத்து செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனால், தமிழக அரசோ, சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தாலும் அதை தாங்களே ஏற்றுக் கொள்ளப் போவதாகவும், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் உறுதி அளித்தது. ஆனால், அடுத்த 5 மாதங்களில் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு சர்க்கரை விலையை  தமிழக அரசு உயர்த்தியிருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களை வழங்குபவர்களுக்கு  தொடர்ந்து ரூ.13.50 என்ற விலையில் சர்க்கரை வழங்கப்படும் என்றும், இதனால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழகத்தில்  மொத்தமுள்ள 2.03 கோடி குடும்ப அட்டைகளில் வெறும் 9.15%, அதாவது 18,64,600 அட்டைகள் மட்டும் தான் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பெறப்பட்டவை. இலவச அரிசி பெறும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 1.91 கோடி, அதாவது 94.05% ஆகும்.  இவ்வளவு பேரை பாதிக்கும் முடிவை அறிவித்து விட்டு அதனால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது குரூரமான சிந்தனை.

மற்றொருபுறம் குடும்பத்தில் எவராவது வருமான வரி செலுத்தினாலோ, வீட்டில் குளிரூட்டி அல்லது மகிழுந்து வைத்திருந்தாலோ அவர்கள் முன்னுரிமையற்ற பிரிவினராக வகைப்படுத்தப்படுவார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை என்னவென்றால் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பமும் முன்னுரிமையற்றதாக அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், தொழில்வரி கட்டுபவர்கள், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரும் அதிக வருவாய் ஈட்டும் பிரிவினராக கருதப்பட்டு அவர்களும் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அறிவித்தது.

எனினும், அவர்களுக்கு தொடர்ந்து நியாயவிலையில் பொருட்கள் வழங்கப்படும் என உறுதியளித்தது. ஆனாலும் சர்க்கரை விலை விவகாரத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழி எவ்வாறு காற்றில் பறக்கவிடப் பட்டதோ, அதேபோல் இதிலும் நடந்து முன்னுரிமையற்றவர்களுக்கு ரேஷன் நிறுத்தப்படும் ஆபத்துள்ளது.

தமிழக அரசின் இத்தகைய மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மக்கள் புரட்சியாக வெடிப்பதற்கு முன்பாக பினாமி அரசு அதன்  தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்; ரேஷன் சர்க்கரை விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in