Published : 13 Jun 2023 04:03 AM
Last Updated : 13 Jun 2023 04:03 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நாளை முதல் 16-ம் வரை என மூன்று நாட்கள் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதால், நகரப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீஸாரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன. இதில், முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் முதலாவது கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, சீனா, பிரேசில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஜி20 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் மீண்டும் ஜி 20 மாநாடு நாளை (ஜூன் 14) முதல் 16-ம் வரை என மூன்று நாட்கள் தனியார் சொகுசு விடுதியில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால், மாமல்லபுரத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் உயர் அதிகாரிகளின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதில், நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பது மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வாகனங்கள் வரும் போது ஈ.சி.ஆரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டன.
மேலும், வரும் 16-ம் தேதி மாநாடு நிறைவடைந்த பின்னர் பல்லவ மன்னர்களின் பாரம்பரிய கலைச் சின்னங்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் கண்டு ரசிக்க உள்ளதாக தெரிகிறது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக நகரப்பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT