Published : 13 Jun 2023 10:06 AM
Last Updated : 13 Jun 2023 10:06 AM
சென்னை: தமிழகத்தில் நேர்மையான முறையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்புத் தலைவர் வெ.ரத்தின சபாபதி வலியுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதில், கூட்டமைப்புத் தலைவர் ரத்தின சபாபதி பேசியதாவது: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை முழுமையாக அமல்படுத்தாமல், 16 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளனர். 11 சதவீதம்வழங்கப்படவில்லை. இதுகுறித்து எந்தக் கட்சி எம்.பி.யும் பேசவில்லை.
ஆனால், களப் போராட்டமோ, சட்டப் போராட்டமோ நடத்தாத முன்னேறிய சமுதாயத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்,தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினார்.
இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீட்டிற்கான புள்ளிவிவரங்களைக் கேட்டது. அதையடுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அம்பா சங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இதில், அம்பா சங்கர் ஓர் அறிக்கையும், மீதமுள்ள 14 உறுப்பினர்கள் மற்றொரு அறிக்கையையும் வழங்கினர். பின்னர் 14 பேரின் அறிக்கை அரசாணையாக வெளியிடப்பட்டு, 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு போராட்டங்கள் நடைபெற்றன.
1989-ல் ஆட்சியில் இருந்த கருணாநிதி எம்.பி.சி வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அதில் 17 சதவீதம் வன்னியர்களுக்கு கிடைக்கும் படி பார்த்துக் கொண்டனர். இதன் காரணமாக 20 சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஓர் அரசுப் பதவிகூட கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் இதர பிற்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி சேர்க்கையில் சலுகை இல்லை.
கல்வி உதவித் தொகையும் கிடைப்பதில்லை. அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் சலுகையோ, முன்னுரிமையோ இல்லை. பொதுப் பிரிவின் கீழ்தான் வேலை பெறும் நிலை உள்ளது. இது தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் கவலைப்படவில்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியபோது,
எந்த அரசியல் கட்சியோ, எந்த சமுதாயத்தினரோ எதுவும் பேசவில்லை. எனவே, தமிழகத்தில் நேர்மையான முறையில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி, சமூக நிதியை அரசு நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு ரத்தினசபாபதி பேசினார். தொடர்ந்த, பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT