

சென்னை: தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 4 இளம் மருத்துவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பணிச்சூழலில் ஏற்பட்ட மன அழுத்தமே அதற்கு பிரதான காரணம் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் நிறைவு செய்த தனுஷ் (24) என்ற மருத்துவரும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் விஜய் சுரேஷ் கண்ணா (38) என்ற உதவி பேராசிரியரும், திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரான சதீஷ் குமாரும் (46), சென்னை, அப்பல்லோ மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் கவுரவ் காந்தி (41) என்பவரும் தங்களது பணியிடங்களிலேயே திடீரென உயிரிழந்தனர்.
இளம் வயதில் உள்ள இவர்கள் இதய செயலிழப்பு மற்றும் நுரையீரல் செயலிழப்புக்குள்ளாகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இது மருத்துவத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியதாவது: தற்போதைய மருத்துவ உலகில் இரு வகையான நிர்பந்தத்தின் கீழ் மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். நிர்வாகத்தின் கட்டாயத்தின் பேரில் தொடர்ந்து பணியாற்றுவது ஒருவகை. மற்றொன்று பணம், புகழ் ஈட்டுவதற்காக பணியாற்றுவது. நாளொன்றுக்கு குறைந்தது 14 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால் இவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலருக்கு சராசரியாக நிமிடத் துக்கு 90-ஆக இருக்க வேண்டிய இதயத் துடிப்பின் அளவு 150-க்கும் மேல் உள்ளது. இதன் காரணமாகவே மருத்துவர்கள் எதிர்பாராமல் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் தற்போது உயிரிழந்த 4 மருத்துவர்களுக்கும் புகைப் பழக்கமோ, மதுப் பழக்கமோ இல்லாதவர்கள். சொல்லப்போனால், மிகவும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடனும் இருந்தவர்கள். அவர்கள் திடீரெனஇறந்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றார்.