

உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலை சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலை சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இல்லை என்ற காரணத்தையும் கூறுகிறது உத்தரப் பிரதேச அரசு.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அனைத்து சமூகத்தையும் அரவணைத்து சென்றால் தான் அந்த அரசு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான அரசாகும்.
தாஜ்மஹாலை இந்தியாவின் அடையாளம் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் தாஜ்மஹால் இடம் பெற்றுள்ளது. உலகத்தில் உள்ள 7 அதிசயங்களில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலும் ஒன்றாகும். அப்பேற்பட்ட அதிசயமான தாஜ்மஹாலின் பெயர் உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இடம் பெறவில்லை என்பது ஏற்புடையதல்ல.
நம் நாட்டில் கலை நுணுக்கத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தாஜ்மஹால் தான். நம் நாட்டில் பல்வேறு சாதி, மத, இன, மொழி இருந்தாலும் அனைத்து தரப்பினரும் விரும்பி சென்று பார்க்கக்கூடிய சுற்றுலாத்தலமாக தாஜ்மகால் அமைந்திருக்கிறது.
தாஜ்மஹல் மதச்சார்பற்ற ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் தாஜ்மகாலை பார்க்க சுமார் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தாஜ்மஹால் அமைந்திருக்கும் மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு இதன் மூலமாக அதிகப்படியான வருவாய் கிடைப்பதோடு மத்திய அரசுக்கும் அன்னியச்செலவானியை அதிக அளவில் ஈட்டித்தருகிறது. இத்தகைய பெருமையும், புகழும் கொண்ட தாஜ்மஹாலை பாதுகாக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும், வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கவும், இந்தியாவின் அதிசயமான இதன் கட்டிடக் கலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர தாஜ்மஹாலை சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கக்கூடாது.
எனவே மத்திய பாஜக அரசு தாஜ்மகாலை உத்திரப்பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து நீக்கக்கூடாது என்று உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் மத்திய பாஜக அரசும் இதற்கு துணைப் போவதாக அமைந்துவிடும். இந்தியாவின் கலாச்சாரத்திற்கு தாஜ்மஹாலும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறலாம்.
மேலும் மத்திய அரசு தாஜ்மஹாலை தொடர்ந்து பேணிப்பாதுகாத்து இந்தியாவின் பெருமையையும், புகழையும் உலக அளவில் நிலைநாட்ட வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது" எனக் கூறியிருக்கிறார்.