

மதுரை: முதலைக்குளம் பெயர் சர்ச்சை தொடர்பான வழக்கில் உசிலம்பட்டி வட்டாட்சியர், செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் முதலைக் குளத்தைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: ”எங்கள் கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ அலுவலகம், ஊராட்சி அலுவலகம், தபால் அலுவலகம் உள்ளிட்டவை முதலைக்குளம் என்ற பெயரிலும், ஆதார் அட்டை,ரேஷன் கடை, காவல் நிலையம் உள்ளிட்டவை கஸ்பா முதலைக்குளம் என்ற பெயரிலும் உள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், வேலை வாய்ப்புக்குச் செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, கஸ்பா என்ற பெயரை நீக்கம் செய்து முதலைக்குளம் என்ற ஒரே பெயரை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் கொண்ட அமர்வு, உசிலம்பட்டி வட்டாட்சியர், செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.