Published : 25 Oct 2017 06:59 PM
Last Updated : 25 Oct 2017 06:59 PM

தனியார் பால் நிறுவன விவகாரம்: பேசுவதற்கு விதித்த தடையை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு

தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக பேசக்கூடாது என தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே மாதம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில் தனியார் பால் நிறுவனங்கள் தரம் பற்றி பேட்டி அளித்திருந்தார். இதை எதிர்த்து தனியார் பால் நிறுவனங்கள் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அக்டோபர் 20 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச தடையை விதித்தார். தனியார் பால் கம்பெனிகள் 3 மாதத்திற்கு ஒருமுறை தங்கள் சொந்த செலவில் பாலை தர ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தார்.

தான் பேச விதித்த தடை உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், ''பால் மாதிரிகளை 3 மாதத்துக்கு ஒரு முறை பால் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே காசியாபாத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை புறக்கணித்து விட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே , அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால் உண்மை வெளிவராது.

சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் என்ற முறையில் தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தான் நான் கருத்து தெரிவித்தேன். உச்ச நீதிமன்றமே பால் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. எனவே அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களை பாதுகாக்க எனது கருத்துகளை கூறினேன்.

மேலும் இந்த விவகாரத்தில் எந்த தனியார் பால் நிறுவனங்களின் பெயரையும் குறிப்பிட்டு நான் கருத்து சொல்லவில்லை. தற்போது உயர் நீதிமன்றம் பால் நிறுவனங்கள் குறித்து தான் பேசக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது, ஒரு குடிமகன் என்ற நிலையிலும் அமைச்சர் என்ற முறையிலும் இது தனது பேச்சுரிமையைப் பாதிக்கிறது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று ராஜேந்திர பாலாஜி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் வரும் என தெரிகிறது.

முன்னதாக, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் இருப்பதாகவும், தரம் குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் வரும் என்று கடந்த மே மாதம் செய்தியாளர்களுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் உரிய ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தங்கள் நிறுவனங்களுக்கு எதிராக பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டைரீஸ் ஆகிய தனியார் பால் நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அக்டோபர் 20ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச தடையை விதித்தார்.

மேலும் தங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளை சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களே அரசு தன் சொந்த செலவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென இடைக்கால உத்தரவிட்டார்.

மூல வழக்கு முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவும் நீடிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x