Published : 20 Oct 2017 12:18 PM
Last Updated : 20 Oct 2017 12:18 PM

டெங்குவை சுகாதாரப் பேரிடராக அறிவித்து போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுக: திமுக மா.செ. கூட்டத்தில் தீர்மானம்

டெங்குவை 'சுகாதாரப் பேரிடர்' ஆக அறிவித்து போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய - மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அவை பின்வருமாறு: 

தீர்மானம்: 1- டெங்குவைத் தடுத்திட விழிப்புணர்வு: திமுகவின் களப்பணிக்கு நன்றி  

‘’மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அரசின் தாமதமான நடவடிக்கைக்காகச் சிறிதும் காத்திராமல், உடனடியாக மின்னல் வேகத்தில் களம் இறங்கி உதவும் கரம் நீட்டி மக்கள் பணியாற்றி வருவதின் தொடர்ச்சியாக, டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் மு.க.ஸ்டாலினுக்கும், பணியில் ஈடுபட்டுவரும் கழகத் தோழர்களுக்கும் மாவட்டச் செயலாளர் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம்: 2- 'சுகாதாரப் பேரிடர்' என அறிவித்து போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய - மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் 

அ.தி.மு.க. ஆட்சியே டெங்கு ஆட்சிதான் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியது உண்மையே என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில், மத்திய அரசிடம் மாநில அரசு அளித்திருக்கும் அறிக்கையில், "2012 முதல் 9.10.2017 வரை டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 40,940 பேர்; டெங்குவால் உயிரிழந்தவர்கள் 126 பேர்" என்று குறிப்பிட்டிருக்கிறது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் முழு எண்ணிக்கையை, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைப்பதைப் போல, அ.தி.மு.க. அரசு மறைக்க முற்படுகிறது.  

எனினும் அரசின் கணக்குப்படியே இதுவரை 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; 126 பேர் இறந்துள்ளார்கள் என்பது எவருக்கும் பேரதிர்ச்சி தருவதாகும். அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறையின் தொடரும் அலட்சியத்தால், தமிழகத்தையே வளைத்து வரும் டெங்குக் காய்ச்சல் இன்றைக்கு மருத்துவ நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்திட வேண்டிய கட்டாயச் சூழலை உருவாக்கிவிட்டது. 

முதலமைச்சரின் தொகுதியிலேயே 1,110 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இவற்றைப் பார்வையிட வந்த மத்தியக் குழு மாநில அரசின் நிர்வாகத் தோல்வியை மறைத்து, 40 பேர் இறந்தது பெரிய விஷயமல்ல என்று இதயத்தில் எள்ளளவும் ஈரமில்லாமல் மனசாட்சிக்கு மாறாகக் கருத்து தெரிவித்ததும், தமிழ்நாட்டை டெங்கு தேசமாக மாற்றி உருக்குலைத்துள்ள அ.தி.மு.க. அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சரே பாராட்டுவதும் நடுநிலையாளர்கள் யாரும் ஏற்க இயலாதவை. 

ஆகவே, அனைத்து முனைகளிலும் முற்றாகத் தோற்றுவிட்ட கையாலாகாத அரசைப் பாராட்டுவதைத் தவிர்த்துவிட்டு, தமிழகத்தில் மருத்துவ நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்து, மாநில அரசு கோரிய நிதியுதவியை அளித்து, டெங்குவில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும் வகையில், இதை ஒரு 'சுகாதாரப் பேரிடர்' என்று கருதி மத்திய - மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் : 3- மாநில உரிமைகளைத் தாரை வார்க்கும் அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம்! 

அ.தி.மு.க. அரசின் ஊழல் அமைச்சர்கள் எப்படியாவது - எதைச் செய்தாவது தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், திராவிட இயக்கம் நெடுங்காலமாகப் போராடிப் பெற்ற மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசிடம், தன்மானம் சிறிதுமின்றி நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து தாரை வார்த்து வருவதற்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.  

தீர்மானம் : 4- அ.தி.மு.க. ஊழல் அமைச்சர்கள் கிரிமினல் நடவடிக்கையிலிருந்து தப்பவே முடியாது! 

எங்கும் கொள்ளை - எதிலும் ஊழல் என்று நிர்வாகக் கட்டமைப்பையே கெடுத்துக் குட்டிசுவாராக்கி, ஊழலில் புரையோடிப் போன அமைச்சர்களும், முதலமைச்சரும் ஊழல் கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது. மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, அதில் குதிரைபேர அரசு நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் ஊழலில் பரஸ்பரப் பங்கு பற்றிப் பேசி பரிமாறினாலும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று இந்தக் கூட்டம் எடுத்துக்காட்ட விரும்புகிறது. 

தீர்மானம் : 5- வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணியில் முறையாகவும் தீவிரமாகவும் ஈடுபடுக! 

வாக்காளர் சேர்ப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை, கழக நிர்வாகிகள் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, 3.10.2017 முதல் 31.10.2017 வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் மற்றும் பெயர்களை நீக்கவும் - திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கால அவகாசத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகம் அளித்த அறிவுரையின்படி கழக நிர்வாகிகளின் பணிகள் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆங்காங்கே ஆளுங் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் அதிகாரிகள் தொடர்பான தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 8.10.2017 அன்றைய சிறப்பு முகாம் முடிவுற்ற நிலையில், அடுத்து 22.10.2017 அன்று நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை கழகத்தினர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது. 

தீர்மானம் : 6- உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக! 

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 2016-ல் முடிந்து நிறைவு பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வந்து, தேவையான முயற்சி எதையும் செய்யாமல் அதிமுக அரசு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி முரண்பட்டு வருவதற்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

ஆகவே மேலும் காலம் தாழ்த்தாமல், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்திட முன்வரவேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’’.  

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x