Last Updated : 31 Oct, 2017 10:06 AM

 

Published : 31 Oct 2017 10:06 AM
Last Updated : 31 Oct 2017 10:06 AM

எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் மீது தேச விரோத வழக்கு பதிவு: சர்ச்சைக்குரிய நூலை வெளியிட்டதே காரணம் என கருத்து

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்(63), தேச ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வசித்து வரும் ஜெயராமனின் தந்தை தங்கவேல், தாய் பேச்சியம்மாள். இவரது மனைவி சித்ரா(53). கடந்த 2014-ம் ஆண்டில் ஆனந்த விகடன் டாப் டென் மனிதர்கள் விருதை பெற்றுள்ளார். 1978 முதல் 2012-ம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு

முனைவர் பட்டத்துக்காக தமிழ் தேசிய இன அடையாளச் சிக்கல் என்ற தலைப்பிலும், எம்ஃபில் பட்டத்துக்காக தமிழ் ஈழம் கோரிக்கை என்ற தலைப்பிலும் ஆய்வு செய்தார். பணி ஓய்வுக்குப் பின்னர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்கி போராடி வருகிறார்.

2014-ம் ஆண்டு ஜூலையில் கும்பகோணத்திலும், 2016-ம் ஆண்டு ஜனவரியில் மயிலாடுதுறையிலும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட முறை கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரது அமைப்பின் போராட்டங்களால்தான் திருவாரூர் மாவட்டம் அடியாமங்கலத்தில் நீரியல் விரிசல் முறையைக் கையாளவந்த இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் கைவிடப்பட்டன. திருவாரூர் மாவட்டம் கடம்பங்குடியில் இவர்கள் இரவில் மேற்கொண்ட முற்றுகைப் போராட்டத்தால் அங்கு 7 இடங்களில் அமையவிருந்த ஆழ்குழாய்க் கிணறுகளுக்கான பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதேபோல, அடியக்கமங்கலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கதிராமங்கலம் போராட்டத்தை தொடக்கம் முதலே ஒருங்கிணைத்தது பேராசிரியர் ஜெயராமன்தான். அங்கு,ஜூன் 30-ம் தேதி போராட்டம் நடத்தியபோது மக்களை கலவரத்துக்குத் தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்ட ஜெயராமன் உள்ளிட்டோர் 42 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தனர். அப்போதுதான் இவரது தந்தை இறந்ததால், 3 நாள் பரோலில் வந்த ஜெயராமன் மீண்டும் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

வழக்குப் பதிவு ஏன்?

தற்போதைய வழக்கு காரணமாக பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது: ‘நதிகள் இணைப்பு திட்டம்- ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற தலைப்பில் நான் எழுதி கடந்த 22-ம் தேதி வெளியிட்டுள்ள நூல்தான் வழக்குக்கு காரணம். அந்நூலை இயக்குநர் கவுதமன் வெளியிட கொளத்தூர் மணி பெற்றுக்கொண்டார்.

நதிகள் இணைப்பு திட்டத்தில் பண்னாட்டு முதலாளிகளை ஈடுபடுத்தி நதிகளை இணைத்துவிட்டு, அவற்றை பன்னாட்டு முதலாளிகள் செய்துள்ள முதலீட்டுக்காக அவர்களிடமே ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதையும், அவர்களிடம் இருந்து விவசாயிகள் காசு கொடுத்து நீரை வாங்கி பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பது குறித்தும் அந்நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன். அதனால்தான் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x