Published : 22 Oct 2017 10:14 AM
Last Updated : 22 Oct 2017 10:14 AM

சினிமா பாணியில் ஆசையைத் தூண்டி ஏமாற்றும் வித்தை: செல்போன் டவர் அமைக்க இடமளித்தால் ரூ.60 லட்சம் தருவதாக நூதன மோசடி - கும்பலைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை

செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் ரூ.60 லட்சம் தருவதாக பலரிடம் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிருஷ்ணகுமார் என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு பத்திரிகை விளம்பரத்தில் செல்போன் டவர் அமைக்க 100 அடி முதல் 600 அடி வரை இடம் கொடுத்தால் ரூ.60 லட்சம் வைப்புத் தொகையாகவும், ரூ.45 ஆயிரம் மாத வாடகையாகவும் தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதை நம்பி அதில் கூறப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, ‘ஒப்பந்த ஆவணங்களை தயார் செய்து கொடுக்க ரூ.5,200 பணத்தை குறிப்பிட்ட கணக்கில் செலுத்தச் சொன்னார்கள். நானும் அதன்படி கட்டினேன். மறுநாளே இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் கையெழுத்திட்டது போன்ற ஆவணம் ஒன்றை எனது இணையதள முகவரிக்கு அனுப்பி வைத்தார்கள். இடத்தை நேரில் பார்க்காமலேயே ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறி ரூ.60 லட்சத்தை விரைவில் வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார்கள்.

டிடிஎஸ் தொகை

மறுநாள் தொடர்பு கொண்டு முதல் கட்டமாக ரூ.30 லட்சம் ரூபாய்கான காசோலை தயாராக இருக்கிறது. இதற்கான டிடிஎஸ் தொகை ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை எங்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள் என்றனர். ரூ.30 லட்சத்தில் இருந்து டிடிஎஸ் தொகையை கழித்துவிட்டு மீதி தொகையை கொடுக்குமாறு நான் கூறினேன்.

அதை அவர்கள் ஏற்கவில்லை. அதன் பின்னரே சந்தேகம் ஏற்பட்டது. வங்கியில் விசாரித்தபோது, நான் பணம் செலுத்தியது ஒரு தனி நபரின் வங்கிக் கணக்கு என்பதும், தவறான முகவரி கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. என்னைப்போல, பலர் அந்த வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தியிருப்பதும் தெரிந்தது” என்றார்.

புகாரின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், டெல்லியில் கால்சென்டர் அமைத்து இந்த மோசடியில் ஈடுபடுவதைக் கண்டுபிடித்தனர். பணம் சம்பாதிக்கும் ஆசையில் பலர் இவர்களிடம் சிக்கி ஏமாந்திருப்பதும் தெரியவந்தது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் இந்த கும்பல் பேசுகிறது. எனவே, மற்ற மாநிலங்களிலும் மோசடி செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த மோசடிக் கும்பலை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வருவதுபோல ஆசையைத் தூண்டி ஏமாற்றும் வித்தையே இந்த பண மோசடி. டவர் வைப்பதற்காக இதுபோன்ற தனி அமைப்புகளை தொலைபேசி நிறுவனங்கள் வைக்கவில்லை. விளம்பரத்தைப் பார்த்து ஏமாறுவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும். பொதுமக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x