

மதுரை: தமிழகம் முழுவதும் குளங்களில் வணிக நோக்கில் மீன்பிடி ஏலம் விடுவதை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் கிராம ஊராட்சி தலைவர் செல்வி இளையராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் அருகே 5 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் கோயிலுக்கு சொந்தமானது என்றுகூறி மீன்பிடி ஏல அறிவிப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த ஏல அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "அந்த காலத்தில் கிராமத்தில் ஒன்றிரண்டு குளங்கள் இருந்தால் ஒரு குளத்தின் நீரை குடிநீருக்கும், மற்றொரு குளத்தின் நீரை கால்நடைகளை குளிப்பாட்டவும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இன்று கால்நடைகளை மினரல் வாட்டர் கொண்டு குளிப்பாட்டும் நிலை உள்ளது.
மேலும் குளங்களில் வணிக நோக்கில் மீன் வளர்க்கப்பட்டு, ஏலம் விடப்படுகிறது. மீன் ஏலம் எடுத்தவர்கள் மீன் வளர்ப்புக்காக குளத்தில் சில வேதிப் பொருட்களை கலந்து விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மாசடைகிறது" என்றனர்.
பின்னர் "உடையாளூர் கிராமத்தில் உள்ள 5 குளங்களின் மீன்பிடி ஏல அறிவிப்புககு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் குளங்களில் வணிக நோக்கில் மீன்பிடி ஏலம் விடுவதை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.