

மதுரை: அரசிடம் முன் அனுமதி பெற்ற பிறகே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இவரது நியமனத்தை 2017ல் அங்கீகரித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், தனது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப் பலன்களை வழங்கக் கோரி ஜேசுபிரபா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கப்பட்டு 2014 முதல் நியமனத்தை அங்கீகரிக்க தனி நீதிபதி 2019-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித் துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உயர் நீதிமன்ற கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ''இந்த வழக்கில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசின் முன் அனுமதி பெறாமல் பணி நியமனங்களை மேற்கொள்ளவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என வாதிடப்பட்டது. ஏற்கெனவே சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்திலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டியதில்லை.
சமூக நீதி அடிப்படையில் சாதி சுழற்சி முறையில் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. இந்த ஆசிரியர்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து ஊதியம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பணி நியமனங்கள் அந்தந்த மறை மாவட்டங்கள் பராமரித்து வரும் பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மறை மாவட்டங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையான பதிவேட்டை பராமரித்து வருகின்றன.
கல்வி நிர்வாகம் வெளிப்படையாக ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்களிடம் விண்ணப்பம் பெற வேண்டியதில்லை. இந்த நியமனங்களை ஆய்வு செய்தால் பணி நியமனம் பெற்றவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரே மதப் பிரிவை சேர்ந்தவர்களாகவும் இருப்பர். இதற்கு அரசிலயமைப்பு சட்டப் பிரிவு- 30 பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டாலும் சமீபத்தில் சில இடங்களில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
கல்வித் துறை உபரி ஆசிரியர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இந்த நிர்வாகங்கள் ஒரு பள்ளியில் காலியிடம் ஏற்பட்டால் உடனடியாக நிரப்புகின்றன. அவர்கள் இன்னொரு பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இருப்பதை கண்டுகொள்வதில்லை. இது தொடர்பாக வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதில் இடைக்கால உத்தரவும் உள்ளது.
எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நிரப்ப வேண்டும். அதே நேரத்தில் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி நிர்வாகம் அனுப்பும் பரிந்துரைகளை காரணம் இல்லாமல் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது. ஆசிரியர் நியமன ஒப்புதல் தொடர்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களிடம் இருந்து பரிந்துரை வந்தால் அந்த பரிந்துரை மீது 10 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எனவே, எதிர்காலத்தில் சிறுபான்மை கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணியிடங்களை அரசிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நிரப்ப வேண்டும். இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவிலும், அமர்வு உத்தரவிலும் தலையிட வேண்டியதில்லை. மறுசீராய்வு மனு முடிக்கப்படுகிறது'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.