Last Updated : 12 Jun, 2023 04:23 PM

 

Published : 12 Jun 2023 04:23 PM
Last Updated : 12 Jun 2023 04:23 PM

காக்கங்கரை ரயில் நிலையம் அருகே உயிரிழப்புகளை தடுக்க மேம்பாலம் அமைப்பது எப்போது?

காக்கங்கரை ரயில் நிலையத்தின் இடதுபுறம் தாழ்வாக உள்ள நடைமேடை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை ரயில் நிலையம் அருகே அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை ரயில் நிலையம் வழியாக தினசரி 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரயில்கள் இந்த வழியாக செல்கின்றன. காக்கங்கரை ரயில் நிலையத்தில் 3 ரயில்கள் நின்று செல்கின்றன. இந்நிலையில், காக்கங்கரை ரயில் நிலையத்தை சுற்றி 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

ஒரு பகுதியில் உள்ள மக்கள் மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டுசென்றால் காக்கங்கரை ரயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை நீண்ட காலமாக உள்ளது. அவ்வாறு தண்டவாளத்தை கடக்கும் போது குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விபத்துகளில் சிக்கும் மக்கள் தங்களது இன்னுயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, அங்கு மேம்பாலம் ஒன்றை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை ரயில் நிலையம் அருகே செவ்வாத்தூர் மற்றும் புதூர் பகுதியில் ரயில்வே கேட் இருந்தாலும், அந்த வழித்தடத்தை பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துவது இல்லை. காரணம் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டுமென்றால் சுற்றி வர வேண்டியுள்ளதால் நேரத்தை சேமிக்க, பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

அவ்வாறு ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காக்கங்கரை ரயில் நிலையத்தை யொட்டி மேம்பாலம் ஒன்றை அமைக்க வேண்டும் என சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கிராம மக்கள் சார்பில் பல முறை மனு கொடுத்துள்ளோம்.

ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறும் ரயில்வே அதிகாரிகள் இதுவரை அதற்கான முறய்சியை எடுக்கவில்லை. அதேநேரத்தில், காக்கங்கரை ரயில் நிலை யத்தில் இடது புறம் உள்ள நடைமேடை தாழ்வாக உள்ளதால், ரயில் ஏறும்போது பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்’’ என்றனர்.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, காக்கங்கரை ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க தென்னக ரயில்வே துறைக்க பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காக்கங்கரை ரயில் நிலையத்தில் நடைமேடையை உயர்த்தி அமைக்கவும் தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x