Published : 25 Oct 2017 08:25 AM
Last Updated : 25 Oct 2017 08:25 AM

விஷால் அலுவலகத்தில் சோதனை: அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை - துரைமுருகன், திருநாவுக்கரசர், திருமாவளவன் கண்டனம்

‘மெர்சல்’ திரைப்படம் தொடர் பாக பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் விஷாலின் அலுவலகத்தில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலக அக்குபங்சர் தினம், ஹை-கியூர் அக்குபங்சர் மையத் தின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அக்குபங்சர் மருத்துவர் எம்.என்.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:

இது ஜனநாயக நாடா?

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘மெர்சல்’ படத்தை இணையதளத்தில் பார்த்ததாக கூறியதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் விஷாலின் அலுவலகத்தில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றுள்ளது. அவசர நிலை காலத்தில்கூட இதுபோன்று நடக்கவில்லை. பாஜகவை பற்றி பேசக்கூடாது என்றால் இது ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்று தெரியவில்லை. நம் நாட்டில் இதுபோன்ற நடவடிக்கை எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சு.திருநாவுக்கரசர் கூறும்போது, “நடிகர் விஷால் மத்திய அரசுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அவரை சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

ஆதாரமற்ற கருத்துகள்

தொல்.திருமாவளவன் கூறும்போது, “பாஜக தலைவர் எச்.ராஜா குறித்து கருத்து தெரிவித்தவுடன் நடிகர் விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு எதிராக ஆதாரம் இல்லாத கருத்துகளை தெரிவித்து வருவது ஏன் என்று தெரியவில்லை ” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x