கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் மேகேதாட்டு அணை கட்ட புதுச்சேரி காங். எதிர்க்கும்: நாராயணசாமி

நாராயணசாமி | கோப்புப் படம்.
நாராயணசாமி | கோப்புப் படம்.
Updated on
2 min read

புதுச்சேரி: “கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் மேகேதாட்டு அணை கட்ட புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கும். தமிழகம், புதுச்சேரி கடைமடைப் பகுதியான காரைக்கால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''புதுவையைச் சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், முதல்வர் ரங்கசாமி கண்மூடி உள்ளார். என்ஆர்.காங்கிரஸ், பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோயில் சொத்துக்களை எம்எல்ஏக்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பாஜக கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பதாக நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த ஊழல் தொடர்பாக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர், ஆளுநருக்கு கோப்பு அனுப்பினார். ஆனால் இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தலைமை செயலாளர் அந்த கோப்பை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். இதன்பேரில் நிதித்துறை செயலர் மற்றும் கலால்துறை துணை ஆணையர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திட்ட அதிகாரியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.5 கோடி கைமாறியுள்ளது.

உயர் பதவியில் உள்ளவர்கள் இதை பெற்றுள்ளனர். இந்த ஊழல் குறித்து உண்மைகள் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதில் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது. இதேபோல அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவை டெண்டர் விடாமலேயே கடலூரை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அளித்துள்ளனர். இதிலும் பெரும் முறைகேடும், ஊழல்களும் நடந்துள்ளது.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை. ஆனால் முதல்வர் ரங்கசாமி, தமிழை சிபிஎஸ்இ பாடத்தில் கட்டாயமாக்குவோம் என சொல்லியுள்ளார். மத்திய அரசின் அனுமதியின்றி எப்படி தமிழை கட்டாயப்படுத்த முடியும்? தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்வர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதலமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்'' என்று குறிப்பிட்டார்.

கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரியில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக சொல்வதை புதுச்சேரி காங்கிரஸ் எப்படி பார்க்கிறது என்று கேட்டதற்கு, "உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் குழு அமைத்துள்ளது. காலத்தோடு தண்ணீர் தர குழு அமைத்துள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் கூட துணை முதல்வர் மேகேதாட்டுவில் அணைக் கட்டுவதாக தெரிவித்துள்ளார். இதனால் காவிரியில் தண்ணீர் குறையும். குறிபாக தமிழகம், புதுச்சேரி கடைமடைப் பகுதியான காரைக்கால் விவசாயிகள் பாதிப்பு அடைவார்கள். காங்கிரஸ் அரசாக இருந்தாலும் மேகேதாட்டு அணை கட்ட புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கும். அணையை கட்ட விடமாட்டோம்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in