

சென்னை: இணைய சேவை இன்று மக்களுக்கு அடிப்படை தேவையாக மாறியுள்ளது. அதேபோன்று கேபிள் டிவி சேவையும், அத்தியாவசிய பொழுதுபோக்கு சேவையாகவும், நாட்டு நடப்புகளை நேரலையில் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. இவ்விரு சேவைகளும் பெரும்பாலும் கேபிள்கள் வழியாகவே வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சென்றடைகிறது. இதனால் இந்த கேபிள்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வலைப்பின்னல்கள் போன்று பின்னிப் பிணைந்து காட்சியளிக்கின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 27 தனியார் நிறுவனங்கள் தங்கள் இணைய சேவை வழங்கும் கண்ணாடி இழை கேபிள்கள் (OFC) மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்கும் கேபிள்களை சுமார் 5 ஆயிரம் கிமீ நீளத்துக்கு மேல் நிறுவியுள்ளன. அவற்றில் இணைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் பிரதான கேபிள்களை மட்டுமே பூமிக்கடியில் பதித்துள்ளன.
வீடுகளுக்கு கொண்டு செல்லும் கேபிள்கள் அனைத்தும் சாலையோர மாநகராட்சி தெருமின் விளக்கு கம்பங்கள் உள்ளிட்டவற்றின் துணையுடன் கொண்டு செல்கின்றனர். இந்நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் வாடகை மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது.
பல நிறுவனங்கள் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று கேபிள்களை நிறுவுகின்றன. சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலும், பெற்ற அனுமதியை விட அதிகமான நீளத்துக்கும் கேபிள்களை நிறுவி வருகின்றன.
இதை மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது கண்டறிந்து, அதற்கு உண்டான வாடகை வசூலிப்பது, வாடகை செலுத்தாவிட்டால், கேபிள்களை துண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.74 கோடிக்கு மேல் நிலுவை தொகை வசூலிக்காமல் இருந்தது தெரியவந்து, அதன் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இணைய சேவை மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு உயர்மட்ட செல்வாக்கு இருப்பதால், விதிகளை முறையாக பின்பற்றி, கேபிள்களை நிறுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆபத்தான முறையில், பாதசாரிகளின் கழுத்தை பதம் பார்க்கும் வகையில் சாலைகளில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன.
சென்னை மாநகரில் சாஸ்திரிபவன் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையோர நடைபாதைகளில் காலில் சிக்கும் வகையிலும், கழுத்தை இறுக்கும் வகையிலும் கேபிள்கள் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இந்த கேபிள்களை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்தி, பாதுகாப்பான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாஸ்திரிபவன் அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கேபிள் நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவைகளை மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு இ-சேவை மையங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தி வருவதால், இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், கேபிள்கள் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க நேர்ந்தால், அது அரசுத் துறைகள் செயல்பட முடியாத நிலையும், பொதுமக்களுக்கு காலத்தோடு அரசின் சேவைகள் கிடைக்க முடியாத சூழலும் ஏற்பட்டு விடுகிறது.
மாநகரப் பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கும் கேபிள்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகராட்சி பேருந்து தட சாலை துறை தலைமைப் பொறியாளர் சரவணபவானந்தத்திடம் கேட்டபோது, "சாலையோரங்களில் ஆபத்தான நிலையில் கேபிள் தொங்குவதாக ஏராளமான புகார்கள் மாநகராட்சிக்கு வந்துள்ளன.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். தொடரபுடைய கேபிள் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார். விரைவில் நடவடிக்கைகளை தொடங்க இருக்கிறோம்" என்றார்.