ரூ.75 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்: மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Updated on
3 min read

சென்னை: மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.75 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.கஸ்டாலின், "தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை உயர்த்துவதற்காகவும் உழவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதுக்கு பிறகு அதற்கான முன்னெடுப்புகளை எல்லாம் நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக நம்முடைய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தினோம். அதன்மூலம் இரண்டு ஆண்டுகளில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை இல்லாத சாதனையாக மிகக் குறுகிய காலத்தில் 1.50 இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி எண்ணற்ற திட்டங்களை வேளாண் துறை மூலமாக நிறைவேற்றி வருகிறோம். அதேபோல தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மேட்டூர் அணையைக் குறிப்பிட்ட நாளான ஜூன் 12ம் தேதிக்குள் திறந்து வைத்து வருகிறேன்.

குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது, கடைமடை வரை காவிரி நீர் சென்றடைய வேண்டும் அதற்கும் திட்டமிட்டோம். அதற்காக கடந்த 2021ம் ஆண்டில், 62 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், காவிரி நதிநீரை திறம்பட பயன்படுத்தி, குறுவை நெல் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, நம்முடைய அரசு 61 கோடியே 9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தைச் செயல்படுத்தியது. இதன் காரணமாக, காவிரி நதிநீர் கடைமடை பகுதி வரைக்கும் சென்று, கடந்த 2021ம் ஆண்டு குறுவைப் பருவத்தில் 4.9 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், கடந்த 2022-ஆம் ஆண்டில், மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தினால், 19 நாட்கள் முன்னதாகவே, அதாவது மே 24ம் நாள் அன்றே மேட்டூர் அணையினை திறக்க நம்முடைய அரசு ஆணையிட்டது. 19 நாட்கள் முன்னரே அணை திறந்தாலும், அதற்கு முன்கூட்டியே அனைத்து கால்வாய்களையும் தூர் வாருவதற்கு நீர்வளத்துறை ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் அரசு ஆணையினை உரிய காலத்தில் வெளியிட்டு, அந்தப் பணிகள் எல்லாம் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. பணியின் தரம் குறித்து அனைத்துத் தரப்பு உழவர்களும் அப்போது மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்.

கடந்த ஆண்டும் காவிரி நதிநீரைத் திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கத்தில், ரூபாய் 61 கோடியே 12 லட்சம் செலவில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவைப் பருவத்துக்கு தேவைப்படும் குறைந்த வயதுடைய நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர்க்கடன் போன்ற இடுபொருட்களும் டெல்டா மாவட்ட உழவர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டன.

இதன் விளைவாக கடந்த ஆண்டில் குறுவை நெல் சாகுபடி கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சாதனையாக, 5.36 இலட்சம் ஏக்கரை கடந்து, 12.76 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து, சாதனை படைத்தது. நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது. மேலும், சென்ற ஆண்டில் மேட்டூர்
அணை நீரை மிகவும் கவனமாக பயன்படுத்தியதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 103.35 அடியாக உள்ளது. எனவே மேட்டூர் அணையினை குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12ம் நாளன்று திறப்பதற்கு நமது அரசு முடிவெடுத்தது.

நீர்வளத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர் வாரும் பணிகளை மேற்கோண்டது. இதற்கென நடப்பாண்டில் 90 கோடி ரூபாயை அரசு அனுமதித்து, இந்தப் பணிகளை ஆய்வு செய்து விரைவாக முடிப்பதற்கு கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, முடுக்கிவிடப்பட்டதால், இந்தப் பணிகள் எல்லாம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன.

இந்தப் பணியின் முன்னேற்றத்தினை நேரடியாக பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு நானும், நம்முடைய நீர்வளத்துறை அமைச்சரும், நம்முடைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், இன்னும் சில அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தஞ்சாவூருக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டோம். மேலும், குறுவை நெல் சாகுபடி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து உழவர்களுடன் கலந்துரையாடி உரிய விவரங்களை கேட்டு அறிந்து கொண்டோம்.

முன்னதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , காவிரி டெல்டா மாவட்ட பகுதி உழவர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி, குறுவை நெல் சாகுபடியினை மூன்றாவது ஆண்டிலும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆணையிட்டிருந்தேன். அதன்படி, தற்போது குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான குறைந்த நாள் வயதுடைய நெல் ரக விதைகளும், ரசாயன உரங்களும், உயிர் உரங்களும் அரசு வேளாண்மை விரிவாக்கம் மையங்களிலும், தனியார் கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு, உழவர்களுக்கு உரிய காலத்தில் விநியோகிக்கப்பட்டன.

இதன் காரணமாக நிலத்தடி நீரை பயன்படுத்தி இதுவரை 1.6 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல்லில் நடவுப் பணி முடிவடைந்துள்ளது. மேலும், சமுதாய நாற்றங்கால் அமைத்து, காவிரி நதிநீர் வந்தவுடன், நடவுப்பணியினை உடனடியாக துவங்கும் வகையில் பணிகள் விரைவாக வேளாண்மை துறையினால் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில் இன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்துள்ளேன்.

நமது அரசு பொறுப்பேற்று, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்று (12.6.2023), மேட்டூர் அணையினை உரிய காலத்துக்குள் நான் திறந்து வைப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், பாசன நீரினை டெல்டா மாவட்ட உழவர்கள் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி இடுபொருட்களை தேவையான அளவு உபயோகித்து, நடப்பு குறுவைப் பருவத்தில் நெல் உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன். நமது உழவர்களுக்கு நடப்பாண்டில் ரூபாய் 75 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தையும் இன்று நான் அறிவிக்கிறேன்.

குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம், 2023 என்ற இந்தத் திட்டத்தின்கீழ்,ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில், 2.5 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான இரசாயன உரங்கள் முழு மானியத்திலும், 1.24 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகள் 50 சதவிகித மானியத்திலும், மாற்றுப் பயிர் சாகுபடிக்காக 15,818 ஏக்கருக்கு மாற்றுப் பயிர் சாகுபடித் தொகுப்பும்,6,250 ஏக்கரில் பசுந்தாளுர விதைகளும், 747 பவர் டில்லர்களும், 15 பவர் வீடர்களும் மானியத்தில் விநியோகம் செய்வதற்காக, மொத்தம் ரூபாய் 75 கோடியே 95 லட்சம் மதிப்பில் குறுவை சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

எனவே, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு காவிரி டெல்டா உழவர்கள் அனைவரும் பாசன நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி, தேவையான அளவு ரசாயன உரங்களை உபயோகித்து, நெல் சாகுபடியினை மேற்கொள்ளுமாறு நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்க நம்முடைய அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும் என்று மீண்டும் ஒருமுறை உங்கள் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in