

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மகளிர் பள்ளிக்குச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவிகளை பூங்கொத்து, சாக்கலேட் கொடுத்து வரவேற்றார்.பின்னர் மாணவிகளுக்கு புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை, காலணிகள் ஆகியனவற்றை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வெப்பச் சலனம் காரணமாகவே பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. புதிய கல்வியாண்டினை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் நன்றாகப் படித்துப் பெருமை சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் என அனைத்துமே துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்குத் திரும்பிய மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் வரவேற்றனர்.
முதல்நாளான் இன்று வகுப்புகள் நடத்தாமல் மாணவர்களை கல்வி ஆண்டிற்குத் தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. மேலும், உலகக் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை 11 மணி அளவில் உறுதிமொழி எடுக்க வேண்டும். அதுகுறித்து மாணவர்கள்,பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமச்சர் அன்பில் மகேஸ், வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தார். அதில் அவர், "புதிய கல்வி ஆண்டு ஜூன் 12-ம்தேதி (இன்று) தொடங்க இருக்கிறது. இப்புதிய கல்வி ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களை சிந்தனையாலும் செயலாலும் கற்றல் கற்பித்தலில் கரம் பற்றிஅழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
"உண்மையான கல்வி என்பது ஒரு குழந்தையின் உடல்-மனம்-ஆன்மா ஆகிய மூன்றிலும் ஆகச்சிறந்த மேம்பாட்டை வெளிக்கொணர்வதே ஆகும்'' என்றார் தேசத் தந்தை காந்தியடிகள். "கல்வி என்பது அறியாமை, மூடத்தனங்களை அகற்றுவதாகவும், அறிவை அள்ளிக்கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்'' என்றார் பெரியார்.
"போட்டியும் பொறாமையும் பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நேராக நடந்து செல்ல நமக்குத் தேவையாக இருப்பது கல்வி மட்டுமே'' என்றார் அண்ணா. ``ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் அதைக்கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்'' என்றார் கருணாநிதி.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும். எனவே, மாணவர்கள் தன்னம்பிக்கையோடும் கற்கவும் ஆசிரியர்கள் தன்னம்பிக்கையோடு கற்பிக்கவும் அனைவரின் எதிர்காலமும் சூரியனாய் பிரகாசிக்கவும் வாழ்த்துகிறேன். இக்கல்வியாண்டு சிறப்பாக அமைய சீர்மிகு வாழ்த்துகள்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.