

சென்னை: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் வெ.ரத்தின சபாபதி, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்த அடிப்படை உரிமைகளைப் பெற்று தருவது ஆகியவை எங்கள் கூட்டமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி, எங்களது சமுதாய மக்களின் கல்வி, சமுதாய நிலை, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு அடித்தளமான இடஒதுக்கீட்டை பெற்றுத் தர தொடர்ந்து போராடி வருகிறோம்.
கொங்கு வேளாளர், முக்குலத்தோர், முதலியார், யாதவர், முத்தரையர், 24 மனை தெலுங்கு செட்டியார் உள்ளிட்ட அனைத்து செட்டியார், தேவாங்கர், பார்கவா (உடையார்), ஊராளி கவுண்டர், விஸ்வகர்மா, வீர சைவர், நாயுடு, நாடார், ரெட்டியார், வேளாளர் உட்பட 255 இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) சமுதாயத்தினருக்கு அரசியல் சாசனம் அளித்த அடிப்படை உரிமைகளை பறித்து, கடந்த 33 வருடங்களாக தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
சலுகைகள் இல்லை... குறிப்பாக, கல்வி சேர்க்கையில் சலுகைகள் இல்லை. கல்வி உதவித் தொகை இல்லை. அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் சலுகைகள், முன்னுரிமை இல்லை.
அனைத்து இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மத்திய அரசில் 1992-ம் ஆண்டு வரை இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. இந்திராசஹாணி வழக்கில் உறுதி செய்யப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டில் தற்போது வரை 11 சதவீத இடங்களை நிரப்பவில்லை.
இந்நிலையில், ஏற்கனவே 56 சதவீதம் மத்திய அரசுப் பணிகளிலும், நிறுவனங்களிலும் பெற்றுவிட்ட சமுதாயங்களுக்கு மீண்டும் 10 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கி இருப்பது நியாயத்துக்கும், சட்டத்துக்கும், சமூக நீதிக்கும் புறம்பானது.
எனவே, நேர்மையான ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். அதுவரை, எந்த சமுதாயத்துக்கும், எவ்வித இடஒதுக்கீடும் வழங்கக் கூடாது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமுதாயங்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (இன்று) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு ரத்தின சபாபதி கூறினார்.