

கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே 2 சுமை வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண்கள், வேன் ஓட்டுநர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் கமல்இருதயராஜ் (44). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள குலதெய்வ கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றுவிட்டு சுமை வேன் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கரூர் மாவட்டம் தென்னிலையை அடுத்த கரைப்பாளையம் அருகே நேற்று அதிகாலை சுமை வேன் செல்லும்போது, காங்கேயத்தில் இருந்து திருச்சிக்கு தார் ஏற்றி வந்து கொண்டிருந்த மற்றொரு சுமை வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் இரு வாகனங்களின் முன்பகுதிகள் நொறுங்கின. இந்த விபத்தில் கிணத்துக்கடவு செல்லும் சுமை வேனில் பயணம் செய்த கமல் இருதயராஜின் மனைவி முத்துலட்சுமி(38), உறவினர்கள் நதியா(38), ரூபிகாதேவி, வேன் ஓட்டுநர் வினோத்(35) ஆகிய 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த கமல்இருதயராஜ், அவரது மகள் கோவர்தனி(14), மகன் வீராசாமி(10), உறவினர்கள் ரஜினி (17), வெங்கடேஷ் (39) ஆகிய 5 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தார் ஏற்றி வந்த வேனில் பயணித்த ஓட்டுநர் ரூபன்(33), பன்னீர்செல்வம்(30) ஆகியோர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மணிகண்டன்(21) என்பவர் காயமின்றி தப்பினார். விபத்து குறித்து தென்னிலை போலீஸார் விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக கரூர்- கோவை சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.